திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுக்காவில் நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பாபநாசம் – குடவாசல் சாலை, கும்பகோணம் – வலங்கைமான் சாலை மற்றும் வலங்கைமான் பேரூராட்சியில் சேனியர் தெரு சாலை, நடுநாராசம் சாலை, வடக்கு அக்ரஹாரம் சாலை என அனைத்து பகுதிகளிலும் பல்வேறு கட்டங்களாக கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு சாலைகள் பள்ளங்கள் தோண்டப்பட்டு குழாய்கள் பொருத்தப்பட்டு வருகிறது.
இதனால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. பல மாதங்களுக்கு முன்னதாக சேனியர் தெரு சாலையில் குழாய்கள் பொருத்தப்பட்ட நிலையில் இதுவரை சாலை சரி செய்யவில்லை, இதேபோன்று பேரூராட்சிக்கு சொந்தமான சாலைகளில் தோண்டப்பட்டு கூட்டு குடிநீர் திட்ட குழாய்கள் பொருத்திய நிலையில் மேடும் பள்ளமுமாக உள்ளது.
வலங்கைமான் பேரூராட்சி முழுவதும் பெரும் புழதிமயமாக காணப்படுகிறது. கனரக வாகனங்கள் சென்று பல நிமிடங்கள் கழித்து புழதிகள் அடங்குவதற்குள்ளாக அடுத்தடுத்து வாகனங்கள் வருவதால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர். பல அடி அகலம் கொண்ட தார்
சாலைகள் அனைத்தும் குறுகிய சாலைகளாக மாறியது. மேலும் பல தார் சாலைகள் மண்சாலையாகவே காணப்படுகிறது. சாலைகளை செப்பனிடுவதற்கு கூட்டுக் குடிநீர் திட்டத்திலிருந்து பேரூராட்சிக்கு உரிய நிதி இதுவரை வரபெறவில்லை என கூறப்படுகிறது. ஒரு வழிப்பாதையான நடுநாராசம் சாலையில் மையப்பரப்பில் குழாய்கள் பொருத்தப்பட்டதை அடுத்து சாலைகளில் ஆங்காங்கே மேடு பள்ளங்களாக உள்ளது.
இதன் காரணமாக கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இந்த சாலையில் செல்வதை தவிர்த்து வந்த நிலையில் தற்போது சாலை தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது, இருப்பினும் முழுமையாக சீரமைக்க வில்லை பருவமழை தீவிரமடைய உள்ள நிலையில் பள்ளங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால் மேடு எது, பள்ளம் எது என தெரியாத நிலையில் வாகன ஓட்டிகள் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்கு ஆளாகி வருகின்றனர். இக்குறைகளை களையும் பொருட்டு மேலும் காலதாமதம் இல்லாமல் பழுதடைந்த சாலைகளை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.