சூடான் நாட்டில் ராணுவம் மற்றும் துணை ராணுவ படையினருக்கு இடையேயான சண்டை பல வாரங்களாக தீவிரமடைந்த நிலையில், வெளிநாட்டினரை மீட்க ஏதுவாக, போர்நிறுத்த ஒப்பந்தம் அமலானது. கடந்த வியாழ கிழமையுடன் போர்நிறுத்த ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், மீட்பு பணிக்கு ஏதுவாக, சூடான் ராணுவம், போர்நிறுத்த ஒப்பந்தம் நீட்டிப்புக்கு அனுமதி அளித்து உள்ளது. சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க அரசுகள் மேற்கொண்ட முயற்சியால் இந்த போர்நிறுத்த ஒப்பந்த நீட்டிப்பை சூடான் ராணுவம் அறிவித்து உள்ளது.

இதனை தொடர்ந்து, பல்வேறு நாடுகளும் தங்களது நாட்டு குடிமக்களை கப்பல்கள், விமானங்கள் கொண்டு மீட்டு வருகின்றன. இந்திய விமான படையின் சி-130 ஜே ரக விமானம், சி-17 ரக போக்குவரத்து விமானம், 2 கடற்படை கப்பல்களும் மீட்பு பணிக்காக சென்று உள்ளன. இந்நிலையில், சூடானில் இருந்து ஜெட்டாவுக்கு மீட்டு கொண்டு வரப்பட்ட இந்தியர்கள் 229 பேர் பெங்களூரு விமானத்தில் சொந்த நாட்டிற்கு இன்று காலை புறப்பட்டு உள்ளனர். இதுபற்றி மத்திய வெளிவிவகார அமைச்சக செய்தி தொடர்பாளர் அரிந்தம் பக்சி வெளியிட்டு உள்ள டுவிட்டர் செய்தியில், ஆபரேசன் காவேரி திட்டத்தின்படி நாட்டு மக்கள் இந்தியாவுக்கு திரும்பி அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் பெங்களூரு வந்து சேரும் விமானத்தில் இன்று புறப்பட்டு உள்ளனர். ஜெட்டாவில் இருந்து நாட்டுக்கு வந்து சேரும் 7-வது விமானம் இதுவாகும் என தெரிவித்து உள்ளார். கடந்த வெள்ளி கிழமை வரை 2,400-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் சூடானில் இருந்து வெளியேற்றப்பட்டு உள்ளனர். ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், சூடானில் இருந்து இன்னும் 3 ஆயிரம் இந்தியர்களை மத்திய அரசு மீட்க உள்ளது. ஆபரேசன் காவிரி திட்டத்தின் கீழ், இந்த மீட்பு பணியில் இண்டிகோ விமான நிறுவனமும் இணைந்து உள்ளது. இதன்படி, விமானத்தில் 231 இந்தியர்கள் நேற்று சொந்த நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். இதேபோன்று, சூடானில் இருந்து மீட்கப்பட்ட 365 இந்தியர்கள் அடங்கிய மற்றொரு குழு நேற்று மாலை டெல்லி வந்தடைந்தனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *