திருவாரூர்,
கடந்த இரண்டு நாட்களாக திருவாரூர் மாவட்டத்தில் வெயில் அடித்து வந்த நிலையில் இன்று மாலை நேரத்தில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென ஒரு மணி நேரம் பரவலாக மழை பெய்தது. இதன் காரணமாக திருவாரூர் நகர் பகுதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கி இருந்தது. குறிப்பாக திருவாரூர் நகர் பகுதியையும் வாளவாய்க்கால் பகுதியையும் இணைக்கும் ரயில்வே கீழ் பாலம் பகுதியில் தண்ணீர் தேங்கி வாகனங்கள் செல்ல முடியாத நிலை காணப்பட்டது.
ஒரு மணி நேரம் பெய்த சாதாரண மழைக்கே ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் வெளியே செல்ல வழி இல்லாமல் தேங்கி நின்றது. இதனால் ரயில்வே கீழ் பாலத்தில் தண்ணீர் குறைவாகத்தான் இருக்கும் என்று எண்ணி அவ்வழியாக சென்ற இருசக்கர வாகன ஓட்டிகள், ஓட்டி வந்த வாகனங்கள் தண்ணீரில் மூழ்கி அப்படியே நகராமல் நின்று விட்டன. இதன் காரணமாக பெரும்பாலான இருசக்கர வாகனங்களை தள்ளிக் கொண்டு செல்லும் சூழல் ஏற்பட்டது.
இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். சாதாரண மழைக்கே தண்ணீர் வடிய வழியில்லாமல் தேங்கி இருந்த சூழலில், பொதுமக்களை அவ்வழியே செல்லாதவாறு அறிவிப்பு செய்யாத திருவாரூர் அரசு நிர்வாகத்தின் மீது பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்தனர்.