55 ஆண்டுகளாக வாடகை வீட்டில் வசித்து வருவதாக வேதனை – 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் பகுதிகளில் வசித்து வரும் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
குமாரபாளையம், பள்ளிபாளையம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த பழங்குடியின மக்கள் பல குடும்பங்களாக வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக சொந்தமாக வீட்டு மனை இல்லாமல் வாடகை வீடுகளில் வசித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான குடும்பத்தினர் தினக்கூலி வேலை செய்து தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருவதால், தொடர்ந்து வாடகை செலுத்துவதற்கே சிரமமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கூறினர்.
மேலும், வீட்டு வசதி இல்லாததால் ஒரே வீட்டில் இரண்டு குடும்பங்கள் வரை சேர்ந்து வசிக்கும் நிலை உள்ளதாகவும், இதனால் குழந்தைகள் மற்றும் குடும்பத்தினருடன் இடநெருக்கடியில் வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.
பல ஆண்டுகளாக சொந்த வீடு மற்றும் வீட்டுமனை இல்லாமல் சிரமப்பட்டு வரும் தங்களது நிலையை கருத்தில் கொண்டு, அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கி, வீடு கட்டுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, குறவர் சமுதாயத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் வன வேங்கை கட்சியின் மாவட்டச் செயலாளர் சிவக்குமார் தலைமையில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.