ம.சங்கரநாராயணன், செய்தியாளர்,தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் இன்று மாலை 6 மணி முதல் 14ஆம் தேதி காலை 6 மணி வரை 144-தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு : தூத்துக்குடி மாவட்டம் பாஞ்சாலங்குறிச்சியில் 12.05.2023 மற்றும் 13.05.2023 தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழா அசம்பாவிதங்கள் ஏதுமின்றி அமைதியாக நடைபெறும் பொருட்டும், சட்டம் மற்றும் ஒழுங்கினை பராமரித்திடவும், 11.05.2023 மாலை 6.00 மணி முதல் 14.05.2023 காலை 6.00 மணி வரை தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144-ன் கீழ் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தூத்துக்குடி மாவட்டத்திலிருந்தும் பிற மாவட்டங்களிலிருந்தும் வந்து விழாவில் கலந்து கொள்ளும் பொதுமக்கள் வாள், கத்தி, கம்பு, போன்ற அபாயகரமான ஆட்சேபகரமான ஆயுதங்கள் ஊர்வலமாக கொண்டு வருவதற்கும், தூத்துக்குடி மாவட்டம் மற்றும் வெளி மாவட்டங்களிலிருந்து அனைத்து வகை வாடகை வாகனங்கள் மூலமாகவும் திருவிழாவிற்கு கலந்து கொள்ள அழைத்து வரப்படுவதற்கும் தடை உத்தரவு பிறப்பித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இத்தடை உத்தரவிலிருந்து பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், தினசரி வாகனங்கள், அத்தியாவசிய பொருட்கள் கொண்டு செல்லும் வாகனங்கள். சுற்றுலாவிற்காக வரும் வாகனங்கள், சரக்கு வாகனங்கள் தினசரி செல்லும் ஆம்னி பேருந்துகள் ஆகியவற்றிற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேற்படி நாட்களில் வேறு ஏதேனும் கூட்டங்கள், அன்னதானம் மற்றும் ஊர்வலங்கள் நடத்தவிருப்பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளரை அணுகி முன் அனுமதி பெற்றுக் கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இத்தடையுத்தரவு திருமணம் மற்றும் இறுதி சடங்கு ஊர்வலங்களுக்குப் பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *