திருவாரூர்,
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூட்டுறவு நகர் குடியிருப்பு பகுதி இருந்துவருகிறது. இதில் சுமார் 2000 -த்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.இத்தகைய கூட்டுறவு நகர் விரிவாக்க பகுதியில் உள்ள சாலைகள் கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக செப்பனிடாமல் குண்டும் குழியுமாக இருந்துவருகிறது.
மோசமான நிலையில் இருந்துவரும் இத்தகைய சாலையில் அண்மையில் பெய்துவரும் லேசான மழைக்கே தாக்கபிடிக்காமல் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளிக்கிது. மேலும் இத்தகைய தேங்கிகிடக்கும் மழைநீருடன் மலக்கழிவுநீரும் கலந்துவருவதோடு, குடிநீரும் மாசடைந்து காணப்படுகிறது.
இதுதவிர தேங்கிகிடக்கும் நீரில் பாம்பு, தேள் முதலான விஷ பூச்சுகளும் வீடுகளுக்குள் புகுந்து வருவதால் குடியிருப்புவாசிகள் மிகுந்த அச்சத்துடன் இருந்துவருகின்றனர்.
இதுகுறித்து கூட்டுறவு நகர் பகுதி மக்கள் பல்வேறு அரசு அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் இப்பகுதி மக்கள், எங்கள் பகுதி தீவுபோல் மாறிவிட்டதாகவும், உடனடியாக எங்கள் பகுதி மக்களை அரசு பாதுகாக்க முன்வராவிடில் சாலைமறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபடபோவதாகவும் எச்சரித்தனர்.