எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி கச்சேரி சாலைக்கு ‘இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ எனப் பெயர் சூட்டித் தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ள நிலையில், அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த நகராட்சி அவசரக் கூட்டத்தைக் கூட்டி ஒப்புதல் பெற வேண்டும் என அதிமுகவினர் வலியுறுத்தினர்.
இதுதொடர்பாக, அதிமுக ஜெயலலிதா பேரவை மாநிலத் துணைச் செயலாளர் மார்கோனி தலைமையில், அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் சீர்காழி நகராட்சி ஆணையர் பாஸ்கரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மேலும், அரசாணையை அமல்படுத்துவதில் எவ்விதத் தாமதமும் செய்யக்கூடாது என வலியுறுத்தினர்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் மார்கோனி கூறியதாவது:
சீர்காழிக்கு ஆன்மிக ரீதியாக திருஞானசம்பந்தர் உள்ளிட்ட பலரும் பெருமை சேர்த்துள்ளனர். அதேபோல், இந்த நூற்றாண்டில் சீர்காழியின் புகழை உலகம் முழுவதும் கொண்டு சென்றவர் இசைமணி சீர்காழி கோவிந்தராஜன். அவருக்குப் பெருமை சேர்க்கும் வகையில், சீர்காழியில் உள்ள ஒரு சாலைக்கு அவரது பெயரைச் சூட்ட வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
அவர் பிறந்த வீதிக்கு ஏற்கெனவே தியாகி சாமிநாதர் தெரு எனப் பெயர் உள்ளதால், கச்சேரி சாலைக்கு சீர்காழி கோவிந்தராஜன் பெயரைச் சூட்ட வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக மற்றும் திமுக ஆட்சிக் காலங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தோம்.
இதன் தொடர்ச்சியாக, தற்போது சீர்காழி கச்சேரி சாலைக்கு ‘இசைமணி சீர்காழி கோவிந்தராஜன் சாலை’ எனப் பெயர் சூட்ட தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த அரசாணையை நகர்மன்றக் கூட்டத்தில் முன்வைத்து ஒப்புதல் பெற்று நடைமுறைப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், அரசாணை பிறப்பிக்கப்பட்ட விவரம் குறித்து நகர்மன்ற உறுப்பினர்களுக்குத் தலைவர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்படவில்லை. சீர்காழி கோவிந்தராஜனின் மகன் சீர்காழி சிவசிதம்பரம் நேரில் வந்து விசாரித்தபோது, அரசாணையை மன்றப் பொருளில் சேர்த்து அனுமதி பெற அதிமுக உறுப்பினர்கள் கமிஷன் கேட்பதாகச் சிலர் தவறான தகவலைப் பரப்பியுள்ளனர். அதிமுக உறுப்பினர்கள் யாரும் இதுபோன்ற கோரிக்கையை முன்வைக்க மாட்டார்கள்.
சீர்காழி நகராட்சியின் பொன்விழா ஆண்டில், சீர்காழியின் புகழை உலகறியச் செய்த இசைமணி சீர்காழி கோவிந்தராஜனின் பெயரை கச்சேரி சாலைக்குச் சூட்டுவது பெருமைக்குரியதாகும். எனவே, தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையை உடனடியாகச் செயல்படுத்த நகராட்சி அவசரக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும். இதற்கு அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிப்பார்கள்.
இவ்வாறு மார்கோனி தெரிவித்தார்.
இந்நிகழ்வின்போது அதிமுக நகரச் செயலாளர் சுரேஷ், மாவட்டப் பேரவைச் செயலாளர் சங்கர் மற்றும் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.