சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி, (வயது 52) இவர் காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை அடுத்த மாடம்பாக்கம், சிவசக்தி நகர் பகுதியில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறார். இவர் தனது வீட்டில் பாண்டிச்சேரி மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதாக தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் கார்த்திகேயனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அந்த ரகசிய தகவலின் பேரில், துணை ஆணையர் கார்த்திகேயன் உத்தரவின் படி, மணிமங்கலம் போலீசார் மாடம்பாக்கம் சிவசக்தி நகரில் உள்ள மூர்த்தியின் வீட்டை சுற்றி வளைத்து அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில், சுமார் 1500 ரூபாய் மதிப்பு கொண்ட பிராந்தி, விஸ்கி, வோட்கா உள்ளிட்ட பல்வேறு ரகங்களைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட முழு (FULL) மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பாண்டிச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டவை என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மூர்த்தியை கைது செய்து மணிமங்கலம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். அவருக்கு இந்த மதுபானங்கள் எப்படி கிடைத்தது? இதன் பின்னணியில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கைது செய்யப்பட்ட மூர்த்தி மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
படப்பை அருகே 100-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.