விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் விஷசாராயம் குடித்த 22 பேர் உயிரிழந்தனர். இந்த விஷ சாராயம் தயாரிப்பதற்கான மெத்தனால் புதுச்சேரியில் இருந்து விற்பனை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக புதுச்சேரியை சேர்ந்த 2 வியாபாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரி கலால்துறை அதிகாரிகள் மெத்தனமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக காங்கிரஸ், அ.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள், சமூக அமைப்பினரும் கலால்துறை மீது குற்றஞ்சாட்டினர். தமிழ்நாடு தலைமை செயலாளரும், இதுதொடர்பாக புதுச்சேரி அரசுக்கு கடிதம் எழுதியதாக முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறியிருந்தார். இந்த நிலையில் கலால்துறை துணை ஆணையரான சுதாகர் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளார். அவர் எழுதுபொருள் அச்சுத்துறை சார்பு செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலத்துறை இயக்குனர் குமரன் கலால்துறை துணை ஆணையர் பொறுப்பினை கூடுதலாக கவனிப்பார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தொழில்துறை இயக்குனரான ருத்ரகவுடுவுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்ட இணை தலைமை செயல் அதிகாரி பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. சிறைத்துறை தலைமை கண்காணிப்பாளரான அசோகன், பேட்கோ மேலாண் இயக்குனர் பொறுப்பினை கூடுதலாக கவனிப்பார். புதுவை குடிமைப்பணி அதிகாரி ரவிச்சந்திரன் வேளாண்துறை துணை இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவினை தலைமை செயலாளர் ராஜீவ் வர்மா பிறப்பித்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *