பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.
பெரம்பலூர்.நவ.26. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், தாங்கள் எவ்வாறு இலக்கை எய்தினீர்கள் என்பது குறித்து அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கும் தெரிவித்து, அனைத்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் 100 சதவீத இலக்கினை எய்திட உதவி செய்திட வேண்டும் என மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந. மிருணாளினி அறிவுறுத்தியதை தொடர்ந்து, பெரம்பலூர் மாவட்டத்தில் 100 சதவீத இலக்கை எய்திய வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்குப் பாராட்டுகளையும் தெரிவித்து ஊக்கப்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் 100 சதவீத இலக்கை எய்திய 14 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் அவர்களுக்கான கண்காணிப்பாளரை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 4.11.2025 முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களுக்கு வீடு வீடாகச் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, அதை எவ்வாறு பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறித்து தெளிவாக விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து, பூர்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்காளர்களிடம் இருந்து திரும்பப் பெற்று, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகச் செயலியில் பதிவேற்றும் பணிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்யத் தெரியாத வாக்காளர்கள் அல்லது கணக்கீட்டுப் படிவங்களை பூர்த்தி செய்வதில் இடர்பாடுகளை எதிர்கொள்ளும் வாக்காளர்களுக்கு உதவிட, தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் உதவி மையங்கள் 22.11.2025 மற்றும் 23.11.2025 ஆகிய 2 நாட்கள் நடைபெற்றது.
அதனடிப்படையில் பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கள்ளப்பட்டியில் பணிபுரிந்த வாசுகி, தொண்டமாந்துறையில் பணிபுரிந்த ஜெகன் மெரிட்டோ, பர்வீன் அப்துல் சலாம், சதீஸ்குமார், வெங்கலத்தில் பணிபுரிந்த தேவி, கிருஷ்ணாபுரத்தில் பணிபுரிந்த மகேஸ்வரி, சமய சுந்தர சாந்தி, வெண்பாவூரில் பணிபுரிந்த ரோஜா, காரியனூரில் பணிபுரிந்த ஜெயந்தி, பாண்டகபாடியில் பணிபுரிந்த ரேகா, தேவகி, பிரம்மதேசத்தில் பணிபுரிந்த கிருஷ்ணவேனி, தேவையூரில் (தெ) பணிபுரிந்த நல்லுசாமி, தேவையூரில் (வ) பணிபுரிந்த கோகிலா ஆகிய 14 வாக்குச்சாவடி நிலை அலுவலர்களும் தங்கள் பகுதிக்கு உட்பட்ட அனைத்து வாக்காளர்களிடம் கணக்கீட்டுப் படிவத்தை வழங்கி, அதை முறையாக பூர்த்தி செய்வதற்கான விளக்கங்களையும் கொடுத்து, படிவத்தை பூர்த்தி செய்ய உதவி தேவைப்படுவோருக்கு உதவி, அனைத்துப் படிவங்களையும் திரும்பப் பெற்று அவற்றை தேர்தல் ஆணையத்தின் பிரத்யேகச் செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர்.
தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணியில் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றி முழு இலக்கையும் எய்தியுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு, மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம், உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வேப்பந்தட்டை வட்டாட்சியர் துரைராஜ் மற்றும் பலர் உடனிருந்தனர்.