மதுரை கோட்டத்தில் முக்கிய ரயில் நிலையங்களில் நடைபெறும் மறு சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ஆய்வு செய்தார். திருநெல்வேலி, விருதுநகர், மதுரை, திண்டுக்கல் போன்ற ரயில் நிலையங்களில் ரயில் நிலைய மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த சீரமைப்பு பணிகளை தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர். என். சிங் ஆய்வு செய்தார். பின்பு திருநெல்வேலி – திருச்சி இடையே சிறப்பு ஆய்வு ரயில் மூலம் ரயில் பாதை மற்றும் ரயில் நிலையங்களை ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் கட்டுமான பிரிவு முதன்மை நிர்வாக அதிகாரி சுசில் குமார் மவுரியா, முதன்மை பொறியாளர் சஞ்சய் பிரசாத் சிங், மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா உட்பட முக்கிய அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


மதுரை ரயில் நிலையத்தில் ரூ 347.47 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் கிழக்கு மேற்கு பகுதி ரயில் முனைய கட்டிடங்கள், 42 மீட்டர் அகல ரயில் பாதை மேற்புறப் பகுதி பயணிகள் காத்திருப்பு வளாகம், நடை மேம்பால மேம்பாட்டு பணிகள், பார்சல் போக்குவரத்திற்கு புதிய தனி நடை மேம்பாலம் அமைப்பது, புதிய விசாலமான இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகன காப்பகங்கள், மேற்கூரையுடன் கூடிய பாதசாரிகள் நடைபாதை, ரயில் நிலையத்தை பெரியார் பேருந்து நிலையத்துடன் இணைக்கும் சுரங்கப்பாதை பணிகளும் அடங்கும். ஏற்கனவே கிழக்கு நுழைவாயிலில் புதிய பல்லடுக்கு இருசக்கர வாகன காப்பகமும், மேற்கு நுழைவாயிலில் புதிய பல்லடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகமும் பயணிகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மேலும் கிழக்கு நுழைவாயிலின் வடக்கு பகுதியில் ஒரு புதிய பல்லடுக்கு நான்கு சக்கர வாகன காப்பகம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணி அடுத்த ஆண்டு நவம்பர் மாதத்தில் நிறைவு பெற்று பயணிகள் பயன்பாட்டிற்கு வரும்.
திண்டுக்கல் ரயில் நிலையத்தில் அம்ரித் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் கீழ் ரூ 22.71 கோடி செலவில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதிய ரயில் நிலைய கட்டிடம், பயணி சீட்டு பதிவு மையங்கள், ரயில் நிலைய கட்டிட முகப்பு மேம்பாடு, மேற்கூரை பணிகள் ஆகியவை அடங்கும்.
மேலும் தோரண நுழைவுவாயில், வெளிவளாக மேம்பாடு, மேற்கூரையுடன் கூடிய நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகன காப்பகங்கள், ரயில் நிலைய கட்டிட முகப்பு மேம்பாடு, ஒருங்கிணைந்த விசாரணை மையம் அமைக்கும் பணி ஆகியவை அடங்கும். மேலும் பயணிகள் காத்திருப்பு பகுதி மேம்பாடு, மின் தூக்கி வசதியுடன் கூடிய ஆறு மீட்டர் அகல நடை மேம்பாலப் பணிகள், மேற்கூரை நீட்டிப்புப் பணிகள் ஆகியவையும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த புதிய வசதிகள் அடுத்த ஆண்டு மே மாதம் பயணிகள் பயன்பாட்டுக்கு திறந்து விடப்படும் என தெரிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *