முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் மற்றும் முத்துப்பேட்டை ஒன்றியங்களில் மருதவனம், மீனமநல்லூர், மாங்குடி, வடசங்கந்தி, குமாராபுரம் ஆகிய பகுதிகளில் மழை வெள்ள பாதிப்புகளை அதிமுக மாவட்டச் செயலாளரான முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் பார்வையிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவ மழையால் விவசாயப் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் முழுவதும் 1 லட்சம் ஏக்கர் பரப்பளவில் விவசாயப் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன இதில் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை பகுதிகளில் முழுமையாக நெற்பயிர்கள் முழுவதுமாக தண்ணீரில் மூழ்கி இருக்கிறது.
நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டு 20 நாள் பயிர்கள் கடந்த ஐந்து தினங்களாக தண்ணீரில் மூழ்கி இருக்கிறது. ஆறு, வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படவில்லை, வளவனாறு, மரக்கான் கோரையாறு, புது பாண்டியாறு உள்ளிட்ட ஆறுகளில் ஆகாயத்தாமரைகள் வளர்ந்து மண்டி இருப்பதால் தண்ணீர் செல்லமுடியாமல் தடுக்கப்படுகிறது.
இதனால் மழைநீர் வடிய முடியாமல் நெற்பீர்கள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் விவசாயக் கடன் போதுமான அளவு வழங்கப்படவில்லை. உரங்கள் தட்டுப்பாடாக உள்ளது. இந்த இடையூறுகளுக்கு மத்தியில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி இருக்கிறது.
இதனை உடனடியாக அரசு போர் நடக்க கால நடவடிக்கைகள் மேற்கொண்டு விவசாயிகளையும், விவசாயத்தையும் காப்பாற்ற வேண்டும். பாதிக்கப்பட்ட பயிர்களை ஆய்வு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளின் துயரில் அரசு பங்கு கொள்ள வேண்டும்.
குறுவை சாகுபடியில் கிடைத்த நெல்மணிகளை விற்பனை செய்வதற்கு முடியாமல் விவசாயிகள் கவலைப்பட்டனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக வந்து பார்வையிட்டு கேள்வி எழுப்பி அதன் காரணமாக நெல் சாகுபடி கொள்முதல் நடைபெற்றது.,
இதுவரையிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளை அமைச்சர் உள்ளிட்ட ஆட்சியாளர்கள் எவரும் வந்து சந்திக்கவில்லை என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
உடனடியாக தமிழக அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு உரிய நிவாரணம் வழங்கி விவசாயிகளை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் தெரிவித்தார். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், அம்பிகாபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.