திருப்பூர் மாவட்டம் தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேச்சு:
“2026 தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி உறுதி”
திருப்பூர் மாவட்டம் தாராபுரம்:
தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இரவு தாராபுரம் வந்தார். ஐடிஐ கார்னர் பகுதியில் தேமுதிக தெற்கு மாவட்ட செயலாளர், வழக்கறிஞர் பன்னீர்செல்வம் தலைமையில் நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் சர்ச் சாலை வழியாக கேப்டன் விஜயகாந்த் ரதயாத்திரையை தொடங்கி வைத்து, ‘உள்ளம் தேடி இல்லம் நாடி’ நிகழ்ச்சியில் நடைபயணமாக பங்கேற்றார். அந்த நேரத்தில் தொண்டர்கள் “கேப்டன் விஜயகாந்த் வாழ்க” என கோஷமிட்டனர்.
பிரேமலதா விஜயகாந்த் உரையில் கூறியதாவது:
2026 சட்டமன்ற தேர்தலில் தொண்டர்கள் விரும்பும் மாபெரும் கூட்டணி அமையும். மக்கள் தலைவர் விஜயகாந்த் விட்டுச் சென்ற பணிகளை தொடர்ந்து நிறைவேற்றுவது தொண்டர்களான உங்களின் கடமை.
இருக்கும் சட்டமன்ற, உள்ளாட்சி, நாடாளுமன்றத் தேர்தல்களில் தேமுதிக நிர்வாகிகள் எம்.பி., எம்.எல்.ஏ., நகராட்சி தலைவர், பஞ்சாயத்து தலைவர், வார்டு கவுன்சிலர் ஆகிய பதவிகளில் அமர வேண்டும். அதற்காக கட்சி தொடர்ந்து பாடுபடும்.
தாராபுரம் உப்பாறு அணைக்கு ஆண்டு முழுவதும் தண்ணீர் விட பரம்பிக்குளம் – ஆள் யாறு திட்டத்தின் கீழ் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொளத்துப்பாளையம் பகுதியில் உள்ள 52 ஏக்கர் நிலத்தில் இயங்கிய ஈரோடு கூட்டுறவு நூற்பாலை தற்போது தமிழக அரசால் கையகப்படுத்தப்பட்டு சிப்காட் தொழிற்சாலை அமைக்கப்படும் என கூறப்படுகிறது. சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் எந்த தொழில் நிறுவனம் வர உள்ளது என்பதை தமிழக அரசு மக்களிடம் விளக்க வேண்டும்.
தாராபுரம் பகுதியில் 50 சதவீதம் நெல் சாகுபடி நடக்கிறது; இங்கே விளையும் நெல் தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் விதைப்பு நெல்களாக அனுப்பப்படுகிறது. புராண சிறப்புமிக்க தாராபுரம் பகுதியில் அடிப்படை வசதிகளை அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தேமுதிக மாநாடு கடலூர் மாவட்டம் பாசார் கிராமத்தில் ஜனவரி 9ஆம் தேதி நடைபெற உள்ளது. மதுரை மாநாட்டில் தலைவரை வரவேற்றது போலவே, உங்கள் பகுதிலிருந்தும் ஏராளமானோர் கலந்து கொள்ள வேண்டும். கேப்டன் விஜயகாந்த் நேரில் வருவது போல நவீன தொழில்நுட்பத்தில் தோன்றி உங்களை சந்திப்பார். மேலும் தாராபுரத்திற்கு மீண்டும் வருவேன் என்றார்.
நிகழ்ச்சியின் சிறப்பம்சங்கள்
பின்னர் விஜயகாந்த் பாடல்களுக்கு ஏற்ப ஆடல்–பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. ‘பொட்டு வெச்ச தங்க குடம்’ உள்ளிட்ட பாடல்களுக்கு பிரேமலதா கைதட்டி உற்சாகப்படுத்தினார்; தொண்டர்களும் உற்சாகமாக நடனமாடினர். பிரேமலதா விஜயகாந்த் மீது மலர் தூவி, பூரண கொம்ப மரியாதையுடன் தொண்டர்கள் வழிவிட்டு அனுப்பினர்.