இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகளில் அனைத்து வாக்காளர்களின் படிவங்களும் தேர்தல் ஆணையத்தின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், இதுவரை நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடர்பாகவும், இந்திய தேர்தல் ஆணையத்தால் இதற்காக வழங்கப்பட்டுள்ள கால நீடிப்பு விவரங்கள் குறித்தும், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் நாள், இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ள நாள் உள்ளிட்ட தகவல்கள் குறித்தம் மாவட்ட தேர்தல் அலுவலர் விரிவகா எடுத்துரைத்தார்.
பின்னர் செய்திளார்களிடம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது...
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி கடந்த 4.11.2025 அன்று முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் தொடங்கப்பட்டது. வாக்களர்களின் வீட்டிற்கே வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் சென்று கணக்கீட்டுப் படிவங்களை வழங்கி, அதை பூர்த்தி செய்வதில் உள்ள சந்தேகங்களை வாக்காளர்களுக்கு விளக்கி முறையாக, முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை திரும்பப் பெற்று அதனை இந்திய தேர்தல் ஆணையத்தின் பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147.பெரம்பலூர்(தனி) மற்றும் 148.குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் உள்ள வாக்காளர்களுக்கு கணக்கீட்டுப் படிவம் கொடுத்து, அதை திரும்ப பெற்று செயலியில் பதிவேற்றம் செய்துள்ளோம். 90 சதவீத்திற்கும் மேல் அனைத்து பணிகளும் நிறைவுற்றுள்ளது. தற்போது இறந்தவர்கள், மாவட்டத்தை விட்டு நிரந்தரமாக வெளியே போனவர்கள், அதே மாதிரி முகவரி மாறியவர்கள் குறித்த கணக்கெடுத்து பட்டியல் தயாரிக்கும் பணிகள் நடைபெறுகின்றது.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கான கடைசி தேதியினை 11.12.2025 வரை கால நீடிப்பு செய்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. எனவே, இந்த காலத்தை இறந்தவர்கள், மாவட்டத்தை விட்டு நிரந்தரமாக வெளியே போனவர்கள் குறித்த கணக்கெடுப்பை மீண்டும் ஒருமுறை சரிபாத்துக் கொள்ளும் வாய்ப்பாக பயன்படுத்திக்கிறோம். குறித்த காலத்திற்குள் அனைத்துப் பணிகளும் முழுமையாக முடிக்கப்படும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி 16.12.2025 அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். 14.02.2026 அன்று இறுதி வாக்காளர் பட்டிய் வெளியிடப்படும்.
சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ள அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய முதல் நிலை அலுவலர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைவருக்கும் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கின்றேன். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வுகளில் வாக்காளர் பதிவு அலுவலர்கள் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வைத்தியநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல்(குன்னம்), வருவாய் கோட்டாட்சியர் அனிதா(பெரம்பலூர்), அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதகள், தேர்தல் பிரிவு வட்டாட்சியர் அருளானந்தம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.