மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தல் ஒரே கட்டத்தில் ஜூலை 8-ந்தேதி நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையாளர் ராஜீவ் சின்ஹா அறிவிப்பு வெளியிட்ட நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பணிகளில் ஈடுபட்டன. 5.67 கோடி வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்தவர்களாக இருந்தனர். அவர்கள் 22 ஜில்லா பரிஷத்துகளுக்கான 928 இடங்கள், பஞ்சாயத்து சமிதிகளுக்கான 9,730 இடங்கள் மற்றும் கிராம பஞ்சாயத்துகளுக்கான 63,239 இடங்கள் ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெற்றது. 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்த பஞ்சாயத்து தேர்தல் முக்கியத்துவம் பெற்று உள்ளது. வாக்காளர்களின் வாக்குகள் யாருக்கு அதிகம் கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்கு பதிவு கடந்த 8-ந்தேதி காலை 7 மணிக்கு தொடங்கியது. இதற்காக வாக்கு சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. வாக்காளர்கள் காலையில் இருந்தே வரிசையில் நின்று, வாக்குகளை செலுத்தி வந்தனர். எனினும், பல பகுதிகளில் வாக்கு மையம் சூறையாடப்பட்டும், வாக்கு பெட்டிகள் தீ வைத்து எரிக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து அதிர்ச்சி ஏற்படுத்தின. பல இடங்களில் ஆளும் கட்சியான திரிணாமுல் காங்கிரசுக்கும், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கும் இடையே வன்முறை ஏற்பட்டது. ஓட்டு பெட்டிகள் எரிப்பு, துப்பாக்கி சூடு போன்ற நிகழ்வுகள் நடந்தன. தேர்தலை முன்னிட்டு நடந்த வன்முறைக்கு 20 பேர் பலியாகி உள்ளனர். தேர்தல் அறிவித்ததில் இருந்து மொத்தம் 45-க்கும் மேற்பட்டோர் வன்முறைக்கு உயிரிழந்து உள்ளனர். தொடர்ந்து, மேற்கு வங்காளத்தின் புரூலியா, பிர்பும், ஜல்பைகுரி, நாடியா மற்றும் தெற்கு 24 பர்கானாஸ் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 697 வாக்கு சாவடிகளில் மறுதேர்தல் நடத்த முடிவானது. நேற்று காலை 7 மணி தொடங்கி மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெற்றது. இதில், மாலை 5 மணி நிலவரப்படி 69.85 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. வன்முறை சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கி நடந்தது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 63,229 கிராம பஞ்சாயத்து இடங்களில் 3,068 இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கிறது. பா.ஜ.க. 151, காங்கிரஸ் 19 இடங்களில் முன்னிலையில் உள்ளன. ஹவுராவில் மொத்தமுள்ள 157 பஞ்சாயத்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 29 இடங்களில் முன்னிலையில் உள்ளன. பா.ஜ.க., இடது சாரி கட்சிகள் மற்றும் காங்கிரஸ் எந்த தொகுதியிலும் முன்னிலை பெறவில்லை. இதேபோன்று, வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் 199 கிராம பஞ்சாயத்து இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 85-ல் முன்னிலை, இடது சாரி கட்சிகள் 20, பா.ஜ.க. 3 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *