ஜெ சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

கற்பித்தல் பணி பாதிப்பதால், மாற்றுப்பணியில் ஆசிரியர்களை கருத்தாளர்களாக நியமிக்க கூடாது. திருவாரூர் மாவட்டப் பொதுக்குழு கூட்டத்தில் ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.

திருவாரூரில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டப் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். மாநில துணைச் செயலாளர் ஜூலியஸ், மாவட்டப் பொருளாளர் சுபாஷ், மாநில செயற்குழு உறுப்பினர் ஐயப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்டச் செயலாளர் ஈவேரா கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து விளக்கி பேசினார். கூட்டத்தின் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு, பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு நிதி சார்ந்த தடையின்மை சான்று வழங்க காலதாமதம் ஏற்படுகிறது.

ஆண்டுதோறும் தணிக்கை செய்யப்பட்டு அதற்கான ஏற்பு அறிக்கைகள் வழங்கப்பட்ட நிலையில் மீண்டும் பணி நாள் முழுவதுமாக ஆய்வுக்கு உட்படுத்தி காலதாமதம் செய்வதை தவிர்த்து உடனடியாக தடையின்மை சான்று வழங்க வேண்டும். ஆசிரியர்கள் கல்வி சான்றுகளுக்கு உண்மைத்தன்மை வழங்குவதில் தாமதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். மேலும் அதனை காரணம் காட்டி மறுக்காமல், தேர்வு நிலை, சிறப்பு நிலை சான்றுகள் வழங்க வேண்டும்.

முத்துப்பேட்டை வட்டாரத்தில் தேர்வுநிலை, சிறப்புநிலை சான்றிதழ் வழங்குவதில் தேவையற்ற காரணங்களை கூறி மறுப்பதை கைவிட வேண்டும். பள்ளிகளில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தின் அடிப்படையில் மாணவர் எண்ணிக்கை இருந்தும் குடவாசல் உள்ளிட்ட வட்டாரங்களில் அலட்சியத்தால் மறைக்கப்பட்ட காலியிடங்களை உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும்.

அரசால் அனுமதிக்கப்பட்ட ஆசிரியர் மாணவர் விகிதத்தின் படி நீடாமங்கலம் உள்ளிட்ட வட்டாரங்களில் ஆசிரியர்கள் பணி புரிய அனுமதிக்க வேண்டும். பட்டதாரி ஆசிரியர் தலைமை ஆசிரியர் பணியிடங்களில் பணி முன்னுரிமையின் படி பதவி உயர்வு வழங்க வேண்டும்.

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். பள்ளிகளில் தொடங்கப்பட்டுள்ள யூகேஜி மற்றும் எல்கேஜி வகுப்புகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா புத்தகம் மற்றும் குறிப்பேடு வழங்க வேண்டும்.

பள்ளிகளில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள எண்ணும் எழுத்தும் திட்டத்தில் கூடுதல் விவரம் சேகரித்தல் உள்ளிட்ட பணிகளை ஆசிரியர்கள் மீது சுமத்த கூடாது. கூட்டத்தில் முத்துப்பேட்டை, நீடாமங்கலம், திருத்துறைப்பூண்டி, வலங்கைமான் ஆகிய வட்டாரங்களின் உறுப்பினர் சேர்க்கைகளை முடித்து பட்டியல், அடிக்கட்டு, தொகை ஆகியவைகளை வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் நிர்வாகிகள் வழங்கினர். கூட்டத்தில் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் தமிழ்வாணன், செல்வமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *