மன்னார்குடியில் வருவாய்த்துறை அலுவலர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அவசர மத்திய செயற்குழு முடிவின்படி வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று (27.2.2024) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் எழுச்சியோடு திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் தொடங்கியது.

தமிழகத்தின் 38 மாவட்டங்கள், 315 வட்டங்களில் உள்ள வட்டாட்சியர், துணை வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், அலுவலக உதவியாளர் உள்ளிட்ட 14,000க்கு மேற்பட்ட அலுவலர்களும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

இதில் 10 மாதங்களுக்கு முன்னதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 3 அமைச்சர்கள் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகள் மீது மேலும் தாமதமின்றி அரசாணை வெளியிடவும்,

2016 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டு வெளியிடப்பட்ட அரசாணையின்படி இளநிலை/ முதுநிலை வருவாய் ஆய்வாளர் பெயர் மாற்ற விதித்திருத்த அரசாணையை உடன் வெளியிடவும்,

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ஆணையிடப்பட்ட பின்பும் காலதாமதம் செய்யப்படும் அலுவலக உதவியாளர் காலியிடங்களை நிரப்பிட வலியுறுத்தியும்,

உயிர் ஆபத்துமிக்க பல பணிகளை மேற்கொணடுவரும் வருவாய்த்துறையின் அனைத்து நிலை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வலியுறுத்தியும்,

பேரிடர் மேலாண்மை பிரிவில் கலைக்கப்பட்ட பணியிடங்களை உடன் வழங்க வலியுறுத்தியும், பொது மக்களுக்கான சான்றிதழ் வழங்க துணை வட்டாட்சியர் பணியிடம், 2024 நாடாளுமன்ற தேர்தல் நிதி ஒதுக்கீடு, முதலமைச்சரின் சிறப்பு திட்டங்களுக்கான கால அவகாசம்/ நிதி ஒதுக்கீடு செய்யவும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வாக்குறுதி அளித்தபடி பங்களிப்பு ஓய்வூதியம் ரத்து, ஈட்டிய விடுப்பு ஒப்படை ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்தம் தொடங்கியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கை இன்னும் சில தினங்களில் இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட உள்ள நிலையில், இப்பணிகளை மேற்கொள்ளவுள்ள வருவாய்த்துறை அலுவலர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற முதலமைச்சர் உத்தரவிட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *