சிறுமி ஆர்த்தி வழக்கு விசாரணை சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிடநாம் தமிழர் கட்சி வலியுறுத்தல்

புதுச்சேரி மாநிலம் முத்தியால்பேட்டை சிறுமி ஆர்த்தியின் படுகொலை தொடர்பாக புதுச்சேரி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மருத்துவர் திருமதி. மேனகா வெளியிட்டுள்ள அறிக்கையில்
கூறியிருப்பதாவது
இந்த ஆண்டு மகளிர் தினத்தை கருப்பு தினமாக மாற்றியமைத்து நமக்கு பரிசளித்திருக்கும் புதுச்சேரி அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும் ஒரு குழந்தை இந்த பூமிக்கு ஜனித்து வரும்போது அதற்கு முதல் பாதுகாப்பு அக்குழந்தையின் பெற்றோர்கள்!
அக்குழந்தை வீட்டை விட்டு வெளியே வரும்போது அதன் பாதுகாப்பை இந்த சமூகத்தில் உறுதி செய்ய வேண்டியது இந்த அரசாங்கம்
என் மகள் ஆர்த்தியின் வன்புணர்வு படுகொலைக் குற்றம் நடந்த பிறகு ரூபாய் 20 லட்சம் நிவாரணம் என்பது வலிக்கு கொடுக்கும் தற்காலிக
வலி மருந்து போல!
அது குற்றத்தின் நிரந்தர தீர்வு அல்ல.
இது புதுச்சேரியா? இல்லை மதுச்சேரியா ?
தெருவுக்கு நாலு படிப்பகங்கள் இருந்தால் மக்கள் படிப்பார்கள் ஆனால் இங்கு தெருவுக்கு நாலு குடிப்பகங்கள் இருப்பதால் மக்கள் குடிக்கத்தான் செய்வார்கள்.

இந்த பொறுப்புணர்ச்சி கூட இல்லாத அரசியல்வாதிகள் கையில் சிக்கி கிடக்கிறது புதுச்சேரி.
மதுவின் வருமானத்தை மட்டுமே நம்பி ஒரு அரசாங்கம் நடந்தால் அது வளர்த்தெடுப்பது இது போன்ற சமுதாயக் குற்றங்களை மட்டுமே.
மார்ச் 2ஆம் தேதி காணாமல் போன என் அன்பு மகள் ஆர்த்தி மார்ச் 5ஆம் தேதி சடலமாக மீட்கப்படுகிறாள் சாக்கடையிலிருந்து. சுமார் நூறு முதல் 150 வீடுகள் மட்டுமே உள்ள சிறு பகுதியான முத்தியால்பேட்டையில் தொலைந்து போன என் மகள் ஆர்த்தியை கண்டுபிடிக்க மெத்தனம் காட்டி தவறவிட்ட புதுச்சேரி காவல் துறை மற்றும் அரசாங்கத்தையும் வன்மையாக கண்டிக்கிறேன்.
புதுச்சேரி துணை நிலை ஆளுநர், புதுச்சேரி முதலமைச்சர், இதர அரசியல் தலைவர்கள் வீதியில் போகும்போது கொடுக்கிற பாதுகாப்பில் கால்வாசி நமது மக்களின் பாதுகாப்பில் காட்டியிருந்தால் கூட என் மகள் ஆர்த்தி காப்பாற்றப்பட்டிருப்பாள்.
ஏழை மகள் என் ஆர்த்தி என்பதால் தானே தேடி கண்டுபிடித்து அதுவும் சடலமாக கொடுக்க நான்கு நாட்கள் எடுத்துக்கொண்டது

இந்த காவல் துறை!
ஒரு அரசியல் தலைவரின் பிள்ளையாகவோ அல்லது விஐபி பிள்ளையோ தொலைந்து இருந்தால் இப்படியா மெத்தனமாக இருந்திருப்பீர்கள்?
நான்கு மணி நேரத்தில் கண்டுபிடித்திருக்க மாட்டீர்களா ??

மூன்று நாட்கள் அதே பகுதியில் காவல்துறை தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கும் போது நான்காவது நாள் திடீரென்று மூட்டையில் சடலமாக சாக்கடையில் தோன்றியது எப்படி??
கைது செய்யப்பட்ட விவேகானந்தன் மற்றும் கருணாஸ் தான் உண்மையான குற்றவாளிகளா ? முதலில் ஏழு பேர் குற்றவாளிகள் என்று ஊடகங்கள் சொன்ன பிறகு எப்படி இரண்டு பேர் மட்டும் குற்றவாளி ஆனார்கள்?? அல்லது வேறு யாரையும் காப்பாற்றுவதற்காக இது போன்ற நாடகம் அரங்கேற்றப்படுகிறதா?

இது போன்ற பல கேள்விகள் மக்களிடையே நிலவி வருவதால் புதுச்சேரி அரசாங்கம் இந்த விசாரணை சம்பந்தமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று புதுச்சேரி நாம் தமிழர் கட்சி சார்பில் வேண்டுகோள் வைக்கப்படுகிறது.

காலம் தாழ்த்தப்பட்ட நீதி அநீதிக்கு சமம் என்பததால், உடனடி தண்டனையை பாரபட்சமின்றி நிறைவேற்ற வேண்டுகிறோம். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி பெரும் முற்றுகை போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *