கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, வடலூரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த சிறப்பு முகாம் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம், 2026 முதற்கட்டப் பணிகள் நிறைவுற்று, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19ந் தேதி (19.12.2025) அன்று வெளியிடப்பட்டது. இப்பட்டியலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் சேர்த்து 9,60,645 ஆண்கள், 9,85,832 பெண்கள், 282 மூன்றாம் பாலித்தனவர் என ஆக மொத்தம் 19,46,759 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கடலூர் மாவட்டத்தில் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்கான முகாம்கள் 27.12.2025, 28.12.2025, 03.01.2026 மற்றும் 04.01.2026 ஆகிய தினங்களில் 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உள்ள 2590 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது.
அதனடிப்படையில் இன்றைய தினம் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெறுவதை சிதம்பரம் வட்டத்திற்குட்பட்ட பெரியப்பட்டு மற்றும் சம்பந்தம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, பி.முட்லூர் அரசு மேல்நிலைப் பள்ளி, புவனகிரி வட்டத்திற்குட்பட்ட புவனகிரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, மேல்புவனகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, மேலமணக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, குறிஞ்சிப்பாடி வட்டத்திற்குட்பட்ட குறிஞ்சிப்பாடி அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வடலூர் வள்ளலார் குருகுல மேல்நிலைப் பள்ளி, கடலூர் வட்டத்திற்குட்பட்ட முதுநகர், வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம், மஞ்சக்கப்பம் புனித வளனார் மேல்நிலைப் பள்ளி ஆகிய வாக்கச்சாவடி மையங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
மேலும், பொதுமக்கள் புதிய வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், திருத்தம், முகவரி மற்றும் புகைப்படம் மாற்றம் ஆகியவற்றிற்கு விண்ணப்பங்களை (https://www.eci.gov.in/electors) (https://voters.eci.gov.in/) ஆகிய இணையதளங்களில் சமர்ப்பிக்கலாம்.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக விசாரணைகள் மேற்கொண்டு வரும் அடுத்த ஆண்டு பிப்ரவரி17ந்தேதி அன்று வெளியிடப்படவுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
எனவே இச்சிறப்பு முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
ஆய்வின் போது சிதம்பரம் சார் ஆட்சியர் கிஷன்குமார், தனித்துணைஆட்சியர் (முத்திரைத்தாள்) தனலட்சுமி, மாவட்ட வழங்கல் அலுவலர் குமாரராஜா, மாநகராட்சி ஆணையாளர் முஜிபூர் ரஹ்மான், கடலூர் வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், வட்டாட்சியர்கள் கீதா, அன்பழகன், விஜய்ஆனந்த், மகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர், ஜீவா செந்தில்