தொட்டு விடும் தூரம் தான் வெற்றி , நூல் விமர்சனம்:கவிஞர் இரா.இரவி

நூல் ஆசிரியர் : கவிஞர் கவிதாசன்
கோவை மாவட்ட ஆட்சியர் திரு.வெ.பழனிக்குமார் இஆப அவர்களின் அணிந்துரை இந்த நூலின் வரவேற்பறையாக உள்ளது.

“கோவைக்கு கிடைத்த மிகப்பெரிய கவிதைச் சொத்து” என்று நூலாசிரியர் கவிஞர் கவிதாசன் பற்றி குறிப்பிடுகின்றார், உண்மை தான். கவிஞராக இருந்து தன்முன்னேற்ற சிந்தனையில் கால் பதித்து, வெற்றிக் கொடி நாட்டி வரும் நூலாசிரியரின் பெருமைமிகு படைப்பு. நூலைப் படிப்பதற்கு முன் வாசகர் மனநிலைக்கும், படித்து முடித்த பின் உள்ள மனநிலைக்கும் உள்ள முன்னேற்றமே இந்த நூலின் வெற்றி.

தினந்தந்தி நாளிதழில், வாரந்தோறும் “இளைஞர் மலரில்” வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல். தினந்தந்தியில் வந்த போது ஆர்வமாக இக்கட்டுரை படித்து வந்த வாசகன் நான். இதனை நூலாகப்படிப்பதில் கூடுதல் மகிழ்ச்சி. நூலாசிரியர் இல்லத்தின் பெயரே “கவியரங்கம்” என்றால் பாருங்கள். கவிதையின் மீது அவருக்கு எவ்வளவு ஈடுபாடு இருக்கும். பல்வேறு விருது, பாராட்டு பெற்ற போதும் கவிஞர் என்பதை மட்டுமே தன் பெயரில் சேர்த்துக் கொண்டவர். எனக்கும் நூலாசிரியருக்கும் ஒரு ஒற்றுமை, நானும் கவிஞர் என்பதை மட்டுமே என் பெயருடன் பயன்படுத்தி வருகிறேன்.

இந்நூலில் 20 கட்டுரைகள் உள்ளது. கட்டுரைகளின் தலைப்பைப் படித்தாலே நமக்குள் தன்னம்பிக்கை விதை விதைக்கப்படுவதை உணருவீர்கள். எல்லாம் உன் கையில், நம்புங்கள் முடியும், தன்னம்பிக்கை தரும் வெற்றி, சிறகை விரி! பிறகு சிரி!! முயன்றால் இமயமும் இடுப்பளவு தான், எண்ணங்களே ஏணிப்படிகள்,வெற்றியின் விலாசம், முன்னேற்றத்தின் முகவரி, வெற்றியின் விருதுகள், வெற்றியின் ரகசியம், திட்டம் தரும் வெற்றி, நம்பிக்கை தரும் வெற்றி, அறிவுச்சுடர் ஏற்றுங்கள், சிந்தனையே சிறந்த தொடக்கம், துணிவே தோழன், வியர்வைப் பூக்களில் வெற்றித் தேன், பிறந்தது வெல்வதற்கே, அச்சத்தை அகற்றுங்கள், ஆர்வம் பொங்கட்டும், முயற்சிகளே மூலதனம் – இந்த தலைப்புகளை இன்னோரு முறை வாசித்துப் பாருங்கள், நூலின் சிறப்பை உணர்ந்து விடுவீர்கள்.

ஒரு கட்டுரை எப்படி எழுத வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறும் விதமாக மிகச் சிறந்த கட்டமைப்பு, சொல்லாட்சி, மேற்கோள்கள், இதயத்தில் பதியும் கவிதை வரிகள் என மிக நேர்த்தியாக எழுதி உள்ளார், ஒவ்வொரு கட்டுரையும் கவிஞரின் வைர வரிக் கவிதைகளால் தொடங்கப்பட்டு முத்தாய்ப்பாக முத்திரை வரிகளால் முடிவு பெறுகின்றது.

“எல்லாம் உன் கையில்” கட்டுரையில்,
முடியும் என்றால் முடியும் – உன் முயற்சிகள் தொடர்ந்தால்
முடியும், வெற்றியின் விடியல் தொடரும் – அது
வியர்வையின் விலாசம் எழுதும் என்று தொடங்கி
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும் நம்மைச் சிறை பிடிக்கும்
எழுந்து நடந்தால் எரிமலையும் நமக்கு வழி கொடுக்கும்

இந்த வரிகளைப் படிக்கும் வாசகனுக்கு புத்துணர்வு பிறப்பது உறுதி என்று அறுதியிட்டுக் கூறலாம்.

முடியாது என்று முடங்கி விட்டால் மூச்சுக்காற்று நின்று விடும் முடியும் என்று துணிந்து விட்டால் மூளைக்குள் மின்சாரம் பிறப்பெடுக்கும்

சிந்தனை விதைக்கும் சின்னச் சின்ன கதைகளும் உண்டு. அறிவார்ந்த அக்பர், பீர்பால் கதையும் உள்ளது. ஒரு கோட்டை அழிக்காமல் சிறிதாக்குவது எப்படி என்ற கேள்விக்கு அருகில் ஒரு பெரிய கோட்டைப் போட்டு, பழைய கோட்டை சிறிதாக்கும் யுத்தியை விளக்குகின்றது. இதில் பெரிய தத்துவமே உள்ளது. நாம் வளர்ந்து விட்ட ஒருவரை அழிக்க எண்ணாமல், நம் முயற்சியால், உழைப்பால் அவரை விட உயர்ந்து காட்டும் உன்னதத்தை விளங்குகின்றது நூல்.

நமது இரண்டு கைகளையும் இயக்குகின்ற மூன்றாவது கை தான் தன்னம்பிக்கை

இந்த கூற்று முற்றிலும் உண்மை. எதை இழந்தாலும் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் தொடர்ந்து முயற்சி செய்தால் இலட்சியத்தை அடைவது நிச்சியம் என்பதை உணர்த்துகின்றது. சமீபத்தில் ஒரு செய்தி படித்தேன். ஒரு பெண் இரண்டு கைகளும் இல்லாமல் கால்களாலே விமானம் ஓட்டுகிறார், காரத்தே பிளாக் பெல்ட் வாங்கி உள்ளார், நீச்சல் அடிக்கிறார், கார் ஓட்டுகிறார், இரு கால்களையே கைகளாகப் பயன்படுத்தி வெற்றி பெற்றுள்ளார். இந்தப் பெண்மணிக்கு மூன்று கைகளும் தன்னம்பிக்கை என்பதை உணர்ந்தேன்.

பறக்க பறக்கத் தான் சிறகுகள் பலப்படும்
உழைக்க உழைக்கத் தான் உயர்வுகள் உனதாகும்

சிலர் உழைக்காமல் வீட்டிற்குள்ளே சோம்பி இருந்து விட்டு வெற்றி கிடைக்கவில்லை சாதனை புரியவில்லை, ஜாதகம் சரியில்லை, நேரம் சரியில்லை என புலம்பும் மனிதர்கள், இந்த நூலைப் படித்துத் திருந்த வேண்டும்.

தவறுவது தவறில்லை, தவறுகளில் இருந்து கற்றுக்
கொள்ளத்
தவறுவதே தவறு
எண்ணங்களே வாழ்க்கையின் வண்ணங்கள்
எண்ணங்களை மாற்றினால் வாழ்கையை மாற்றலாம்.

சிந்தையை செதுக்கும் வைர வரிகள். இப்படி நூல் முழுவதும் சிந்தனைக்கு விருந்தாக செய்திகள் பல உள்ளன. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என சராசரி வாழ்க்கை வாழாமல் பிறந்தோம், சாதித்தோம், சுவடினைப் பதிப்போம் என உன்னத வாழ்க்கை வாழ உதவிடும் ஒப்பற்ற நூல். கணினி யுகத்திலும் நூல்கள் நம் வாழ்வில் மாற்றத்தை, உயர்வை உருவாக்கும் என்பதற்கு உதாரணம் இந்த நூல். தன் முன்னேற்ற சிந்தனை நூல்கள் பல படித்துள்ளேன். ஆனால் இந்த நூல் சிறப்பாகவும், தனித்துவமாகவும் உள்ளது. ஆசிரியருக்கு பாராட்டுக்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *