தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகளின் வரலாற்றுச்சிறப்பு மிக்க தென்னிந்திய சுற்றுப்பயணத்தின் போது அச்சிறுபாக்கம் வருகை தந்தார் என்ற வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் இரயில் நிலையம்!

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் 1946 – ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் வாரத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காந்தியடிகள் தனது சுற்றுப்பயணத்தின் போது, மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கும், பழனி முருகன் கோவிலுக்கும் சென்று தரிசனம் செய்தார்.

தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் அவர்கள் கடந்த 2-2-1946 -ம் நாள் சென்னைக்கு அருகே உள்ள காட்டுப்பாக்கம் இரயில் நிலையத்தில் இருந்து தனி ரயிலில் புறப்பட்டு மதுரை சென்றார்.

காந்தியடிகள் தனி ரயிலில் வருகின்ற தகவல் அறிந்து பொதுமக்கள் அவரைப் பார்க்க கூடும் அப்போது அவர் ரயிலில் இருந்த படியே மக்களிடம் பேசிட ஒலிபெருக்கி வசதிகளையும் செய்திருந்தனர்.

இந்த ரயில் பயணத்தின் போது காந்தியடிகள் அவர்களுடன் இராஜாஜி, காமராஜர் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் பத்திரிகை நிருபர்களும் இரயில் உடன் வந்தனர்.

இன்றைய செங்கல்பட்டு மாவட்டம் ( அன்றைய சைதாப்பேட்டை நிர்வாக மாவட்டம் ) அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்தில் தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் வந்த ரயில் நிற்பதற்கு முன் ஏற்பாடுகள் சிறப்பாக செய்யப்பட்டது. அதுசமயம் மகாத்மா காந்தியடிகளை வரவேற்க விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பொதுமக்கள் என பலரும் ரயில் நிலையத்தில் சூழ்ந்திருந்தனர்.

மகாத்மா காந்தியடிகள் பயணித்த ரயில் திட்டமிட்டபடி அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்திற்கு வந்து நின்றது விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் பி.கே.எஸ் என்னும் டாக்டர் ஷெனாய், சையத் அஹமது ஜானி பாஷா, கண்ணப்ப ஆச்சாரி, மணி அய்யர், சுப்பிரமணி நாயக்கர் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மகாத்மா காந்தியடிகள் அவர்களுக்கு மாலை அணிவித்து பழங்களை வழங்கி வரவேற்றனர்.

காந்தியடிகள் ராஜாஜி மற்றும் காமராஜர் ஆகியோருடன் அச்சிறுபாக்கம் ரயில் நிலைய நடைபாதைக்கு வந்தார். அப்பகுதியில் அமைத்திருந்த மேடையின் மீது ஏறி நின்று கூடிநின்ற மக்களுக்கு மத்தியில் வணக்கத்தை தெரிவித்து, ஆசியும் கூறினார். அதனை தொடர்ந்து ரயிலில் அமைக்கப்பட்டிருந்த ஒலிபெருக்கியில் பேசுகையில் தனக்கு தென்னிந்தியாவை குறிப்பாக தமிழகத்தை அதிகம் பிடிக்கும் என இந்துஸ்தானியில் கூறினார்.

தொடர்ந்து உரையாற்றிய மகாத்மா காந்தியடிகள் “சாந்தியை நிலை நிறுத்துவது எனக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கிறது. அதிகாலையில், இந்தக் குளிரில் இவ்வளவுபேர் கூடியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சி கொள்கிறேன். நான், மீனாட்சி அம்மனைத் தரிசிக்கச் செல்வதற்கு முக்கிய காரணம் உண்டு. அதில் விசேஷம் இருக்கிறது. மகிமை பொருந்திய மீனாட்சி அம்மன் கோயில் எனது அன்பார்ந்த ஹரிஜனங்களுக்குத் திறந்துவிடப்பட்டுள்ளது. ஹரிஜனங்களுக்குத் திறந்துவிடப்படுவதற்குமுன், பல தடவைகள் நான் அந்த நகரம் வழியாய்ச் சென்றிருக்கிறேன். என்றாலும் அந்தக் கோயில் பக்கம் திரும்பிப் பார்த்ததில்லை. நான், தீண்டாமையை அடியோடு வெறுக்கிறேன்” என்று பேசினார் திரண்டிருந்த பொதுமக்கள் , காந்தியடிகளின் பேச்சை வரவேற்று கரகோஷம் செய்தனர். தொடர்ந்து பல்வேறு கருத்துகளை எடுத்துரைத்த மகாத்மா காந்தி அவர்கள் இறுதியாக மக்களுக்கு ஆசி கூறினார். காந்தியடிகளுக்குக் கூட்டத்தினர் கைகளை மேலே உயர்த்தி வணக்கம் செய்தனர். மகாத்மா காந்தியடிகள் புன்சிரிப்புடன் அதனை ஏற்றுக்கொண்டார். அதனைத் தொடர்ந்து மக்களின் ஆரவாரத்துடன் அச்சிறுபாக்கத்தில் இருந்து ரயில் புறப்பட்டது பின்னர் , விழுப்புரம் , விருத்தாசலம் , அரியலூர், லால்குடி, ஸ்ரீரங்கம் , திருச்சி , சமயநல்லூர் வழியாக காந்தியடிகள் சென்ற தனி ரயில் மதுரை மாநகரை அடைந்தது . 3.2.1946 அன்று மதுரையில் நடந்த மாபெரும் கூட்டத்தில் அண்ணல் கலந்து கொண்டார் . மதுரை சொக்கநாதர் கோவிலில் அவர் வழிபாடு நடத்தினார் மாலை 5 மணிக்கு பழநி நகர் வந்து சேர்ந்தார் இரவே அங்கிருந்து புறப்பட்ட காந்தியடிகள், அக்கரைப்பட்டி ரயில் நிலையத்திலே தங்கினார். மறுநாள் , 4.2.1946 அன்று திருச்சி , தஞ்சாவூர் , கும்பகோணம் , மாயவரம் , சீர்காழி , கடலூர் , விழுப்புரம் , திருமணி , செங்கற்பட்டு , தாம்பரம் வழியாக மீண்டும் அம்பத்தூரில் ரயில் நிலையம் வந்து வார்தா ஆசிரமத்திற்குப் புறப்பட்டு சென்று காந்தியடிகள் தனது தமிழ்நாட்டுச் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டார்.

மகாத்மா காந்தியடிகள் அச்சிறுபாக்கம் ரயில் நிலையம் வருகை தந்து 75 ஆண்டுகள் பவள விழா ஆண்டு என்பதை நினைவூட்டும் வகையில் மனிதநேய உறவுகள் அறக்கட்டளை சார்பில் ரயில் நிலையத்தில் கடந்த 2021 ஆண்டு பிப்ரவரி 2ம் தேதி அச்சிறுபாக்கம் பகுதி இளைஞர்கள் ஒன்று கூடுகை நடத்தப்பட்டு அதில் வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்திற்கு தேசத்தந்தை மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டி நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்பட்டது

தேசத்தந்தை மகாத்மா காந்தி அவர்களின் ரயில் பயணம் அச்சிறுபாக்கம் வருகை குறித்து
மண்ணின் மைந்தர் ஆ.கோபண்ணா அவர்கள் எழுதிய காமராஜர் ஒரு சகாப்தம் என்ற நூலில் 89 ஆம் பக்கத்திலும், என்.வி.கலைமணி அவர்கள் எழுதியுள்ள “தேசியத் தலைவர் காமராஜர்” என்ற நூலில் 215 பக்கத்திலும், கவிஞர் செந்தூர் நாகராஜன் அவர்கள் எழுதியுள்ள “காமராஜர் காவியம்” என்ற நூலில் 227ஆம் பக்கத்திலும்,
” தமிழ்நாட்டில் காந்தி ” என்ற நூலாசிரியர் அ .இராமசாமி அவர்கள் 937 ஆம் பக்கத்திலும் பதிவு செய்துள்ளனர் இப்படிப்பட்ட வரலாற்றை தாங்கி நிற்கும் அச்சிறுபாக்கம் ரயில் நிலையத்திற்கு தேசத்தந்தை மகாத்மா காந்தி பெயர் சூட்டப்பட்டு நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை அரசு உடனே நிறைவேற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அன்புடன்
அச்சிறுபாக்கம் எஸ்.எம்.ஷாஜஹான்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *