க.தினேஷ் குமார் செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
பச்சூர் அருகே சொத்தமலை கிராமத்தில் முப்பெரும் ஆலய மகா கும்பாபிஷேகம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி தாலுக்கா, பச்சூர் அடுத்த சொத்தமலை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ செல்வ கணபதி, ஸ்ரீ கல்யாண முருகர் மற்றும் அகிலாண்ட அருள் ஸ்ரீ சொத்தமலை மாரியம்மன் ஆலயங்களின் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது.
இந்த முப்பெரும் ஆலயங்களின் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பல்வேறு திருக்கோவில்களில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு, யாகசாலை அமைக்கப்பட்டு சிறப்பான முறையில் வேத மந்திரங்கள் முழங்க பல்வேறு யாகங்கள் மற்றும் பூஜைகள் நடைபெற்றன.
அதனைத் தொடர்ந்து, ஸ்ரீ செல்வ கணபதி கோபுரம், ஸ்ரீ கல்யாண முருகர் கோபுரம் மற்றும் ஸ்ரீ சொத்தமலை மாரியம்மன் ஆலய கோபுரத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
மேலும் அந்த நேரத்தில் ஆலயம் முழுவதும் பக்தர்கள் “ஓம் சக்தி… ஓம் சக்தி…” என முழங்கிய கோஷங்கள் ஒலிக்க, பக்தி பரவச சூழல் நிலவியது.
பின்னர், ஸ்ரீ சொத்தமலை மாரியம்மனுக்கு பாலாபிஷேகம், திருநீறு அபிஷேகம், இளநீர் அபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இந்த விழாவில் கலந்து கொண்ட ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு சிறப்பான முறையில் அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும், இந்த நிகழ்வில் இறை ஞான தத்துவம் சார்பில் குரு ஜம்பு தாச அடிகளார், பல்வேறு குருமார்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு மகா கும்பாபிஷேக விழாவை சிறப்பித்தனர்.