துறையூர் 18 வது வார்டில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டாம்-திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு
திருச்சி நவ-05
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் துறையூரை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க கூடாது என கோரிக்கை மனு அளித்தனர்.அந்த மனுவில் கூறியிருப்பதாவது,துறையூர் நகராட்சியில் உள்ள 17வது18வது வார்டு விநாயகர் தெரு பகுதியில் சுமார் 1,500 க்கும் மேற்பட்ட வீடுகளில் 15,000 க்கும் மேற்பட்ட பட்டியல் இன சமூகத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறோம்.கடந்த 40 ஆண்டுகளாக துறையூர் நகராட்சியில் உள்ள 24 வார்டுகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் எங்கள் பகுதியில் கொட்டப்பட்டு வந்தது. இதனால் எங்கள் பகுதி மக்கள் யானைக்கால் பாதிப்பு, காற்றால் நோய் தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து மக்களின் தொடர் முயற்சிக்கு பின் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் குப்பை கிடங்கு அங்கிருந்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டது. தற்போது அதே பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால் துறையூரில் உள்ள உணவகங்கள், மருத்துவமனைகள் மற்றும் வணிக வளாகங்களில் இருந்து வெளியேறும் கழிநீர் எங்கள் பகுதியில் கொண்டு வந்து சுத்திகரிக்க பட உள்ளதாக தெரிகிறது.
இதனால் எங்கள் பகுதியில் மீண்டும் நோய் பரவும் அபாயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.ஆகவே இது சம்பந்தமாக கடந்த ஜூன் மாதம் நகராட்சி அலுவலகத் தில் அமைதி பேச்சுவார்தை நடத்தும் போது, நகராட்சி ஆணையர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கும் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைத்து உத்தரவிட்டார். மேலும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு நகராட்சி ஆணையர் மற்றும் நகர்மன்ற தலைவரிடம் வேறு இடத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க கூறினார்.
ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதுகுறித்து பல முறை துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மக்களை அழைத்து அமைதி பேச்சுவார்தை நடத்தினர். இதையடுத்து துறையூர் சப்-கலெக்டர் கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைய உள்ள இடத்தை பார்வையிட்டார். இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை என தெரிகிறது. எனவே எங்கள் பகுதியில் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக் காமல், பூங்கா,உடற்ப்பயிற்சி கூடம் போன்றவை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.இதில் 17 மற்றும் 18வது வார்டு மோகன், சரண்ராஜ், நல்லுசாமி ,சசிகுமார்,மருதமுத்து, செல்வம் , பிச்சைரத்தினம், ராஜேந்திரன், அன்பழகன், நாகராஜ்,மூப்பன் மோகன் உள்ளிட்ட பொதுமக்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
வெ.நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்