பொன்னேரி பேருந்து நிலையத்தை ரூபாய் 1.45 கோடி மதிப்பீட்டில் சீரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பேருந்து நிலையத்தில் நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் கிராமப்புறங்களில் இருந்து பொன்னேரி பேருந்து நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர், வியாபாரிகள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் என பலதரப்பட்ட மக்கள் பேருந்து சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் பழமையான பேருந்து நிலையத்தை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி புதியதாக கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ துரை.சந்திரசேகர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பேருந்து நிலைய கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார்.
1.45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் நடைபெற உள்ள நிலையில், மீஞ்சூர் மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் அம்பேத்கர் சிலை சந்திப்பிலும், செங்குன்றம், பெரியபாளையம் மார்க்கங்களில் செல்லும் பேருந்துகள் பழைய பேருந்து நிலைய சந்திப்பிலும், பழவேற்காடு மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் தேரடி சந்திப்பிலும் நிறுத்தப்பட்டு பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.