புதுச்சேரி சட்டமன்ற வளாகம் கடற்கரை சாலை அருகில் பாரதி பூங்கா எதிரே சுமார் 87 ஆயிரம் சதுர அடியில் அமைந்துள்ளது. கடந்த 1820-ம் ஆண்டு பிரெஞ்சு அரசால் கட்டப்பட்ட இந்த கட்டிடம் மருத்துவமனையாக இருந்தது. 1959-ம் ஆண்டில் இருந்தே சட்டசபை வளாகமாக செயல்படுகிறது. 200 ஆண்டுகள் பழமையான சட்டமன்ற கட்டிடம் புதுவையின் 19 பாரம்பரிய கட்டிடங்களில் ஒன்றாகும். பழமையான கட்டிடம் என்பதால் மைய கட்டிடம் வலுவிழந்துள்ளது. இந்த நிலையில் பரந்த நில பரப்பில் தலைமை செயலகத்துடன் இணைந்த சட்டமன்ற வளாகம் அமைக்க கடந்த 2000-ம் ஆண்டு முதலே பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே 4 முறைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், நில தேர்வில் சிக்கல் ஏற்பட்டதால் கைவிடப்பட்டது. இந்த நிலையில் 2021-ல் முதல்-அமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைந்த என்.ஆர்.காங்கிரஸ் – பா.ஜனதா கூட்டணி அரசு புதிய சட்டமன்ற வளாகத்தை உருவாக்க தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்துள்ளது. அதன்படி தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள ராஜீவ் காந்தி சிலை சதுக்க பகுதியில் 15 ஏக்கரில் சட்டப்பேரவை, தலைமைச் செயலகம் இணைந்த புதிய சட்டமன்ற வளாகம் கட்டப்படவுள்ளது. மொத்தம் 15 ஏக்கரில் 5 ஏக்கர் பரப்பளவுக்கு பேரவைக் கட்டிடங்கள் அமையவுள்ளன. ரூ.400 கோடியில் புதிய சட்டமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் சபை நடவடிக்கையை நேரில் பார்க்கும் வகையில் நவீன வசதிகளுடன் பேரவை கூட்ட அரங்குடன் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்டோருக்கான நவீன அறைகள், காபினட், கமிட்டி அறைகள் அமையவுள்ளது. பேரவை வளாகம் தரைத்தளத்துடன் 5 மாடிகள் கொண்டதாக அமையவுள்ளது. பேரவை வளாகத்தையொட்டி தலைமை செயலகமும், சட்டமன்ற செயலகம், நூலகம் உள்ளிட்டவையும் அமைய உள்ளது. தலைமை செயலகம் தரை தளத்துடன் 4 மாடிகளுடன் அமைய உள்ளது. அதோடு உட்புற சாலைகள் 7 மீட்டர் அகலத்திலும், நடைபாதை 2 மீட்டர் அகலத்திலும் ஏற்படுத்தப்பட உள்ளது. மேலும், 1000-க்கும் மேற்பட்ட வாகனங்களை நிறுத்தும் வகையில் வசதியும் ஏற்படுத்தப்படவுள்ளது. இதோடு ஹெலிகாப்டர் இறங்கு தளமும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. புதிய பேரவைக் கட்டிடமானது பல மாநிலங்களின் சட்டப்பேரவைகளை ஆராய்ந்து அதில் இருந்து தனித்து சட்டப்பேரவை கட்டிட மாதிரியாக அமையும் வகையில் வரைபடம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த சட்டமன்ற வளாகம் கட்ட விரிவான திட்ட அறிக்கையை மத்திய பிரதேசம் நொய்டாவை சேர்ந்த எனார்க் கன்சல்டன்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிறுவன அதிகாரிகள் கட்டிடத்துக்கான மாதிரி வரைப்படத்தை முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம் காண்பித்தனர். புதுவை பொதுப்பணித்துறை தலைமை என்ஜினியர் சத்தியமூர்த்தி விளக்கினார். இந்த வரைபடத்துக்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். மத்திய அரசின் ஒப்புதலுக்கு பிறகு டெண்டர் விடப்படும். இதன் பிறகு புதிய சட்டமன்ற வளாகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெறும்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *