திருவொற்றியூர், நவ. 21:

பள்ளி மாணவர்கள் மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து சாலை பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

போதைப்பொருள் ஒழிப்பில் அரசு தீவிரம் காட்டி வரும் நிலையில், பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், ஆவடி காவல் ஆணையரின் அறிவுறுத்தலின்பேரில், மணலி போக்குவரத்து உதவி ஆணையர் சுந்தர்ராஜன் தலைமையில், மணலி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் போதைப்பொருள் பயன்பாட்டின் தீமைகள், சாலைப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகளை முறையாகப் பின்பற்றுவதன் அவசியம் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

தொடர்ந்து, அரசு மேல்நிலைப் பள்ளியில் இருந்து மார்க்கெட் பகுதி வரை மாணவர்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியபடி பேரணியாகச் சென்றனர். அப்போது போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

நிகழ்ச்சியில் பேசிய போலீசார், “மாணவர்கள் படிக்கும் வயதில் போதைப்பொருட்களுக்கு அடிமையானால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே, போதைப்பொருள் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாலைப் பாதுகாப்பு விதிகளை மாணவர்கள் தங்களும் கடைப்பிடிப்பதுடன், பெற்றோர் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் தலைக்கவசம் அணியவும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றவும் வலியுறுத்த வேண்டும்” என்றனர்.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணகுமார், உதவி ஆய்வாளர்கள் வெற்றிவேல், விஜோஸ் மற்றும் போக்குவரத்து போலீசார் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *