ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டி-33 தங்கம் உட்பட 66 பதக்கங்கள் வென்று கோவை திரும்பிய வீரர்,வீராங்கனைகளுக்கு உற்சாக வரவேற்பு
தமிழகத்தின் பாரம்பரிய தற்காப்பு கலை மற்றும் விளையாட்டான சிலம்பத்தை தற்போது பள்ளி கல்லூரி மாணவர்கள் ஆர்வத்துடன் கற்று வருகின்றனர் தமிழக மாணவர்கள் தேசிய,சர்வதேச சிலம்பம் போட்டிகளில் தொடர்ந்து வெற்றிகளை குவித்து கவனம் ஈர்த்து வருகின்றனர்..
அந்த வகையில் அண்மையில் ஸ்ரீலங்காவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் கோவை முல்லை மார்ஷியல் அகாடமியை சேர்ந்த 24 மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர்..
மலேசியா,இந்தோனேஷியா,தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான போட்டியாளர்கள் கலந்து கொண்ட இதில், குத்துவரிசை, நெடுங்கம்பு வீச்சு, நடுக்கம்பு வீச்சு, மான் கொம்பு, வேல் கம்பு, இரட்டைக் கம்பு, சுருள் வாள், தொடுமுறை கம்பு சண்டை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன..
சர்வதேச அளவிலான போட்டியாக நடைபெற்ற இதில் இந்தியா சார்பாக கலந்து கொண்ட கோவை வீரர்,வீராங்கனைகள், 33 தங்கப் பதக்கங்கள், 21 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 12 வெண்கலப் பதக்கங்கள் என மொத்தம் 66 பதக்கங்கள் வென்று கவனம் ஈர்த்தனர்..
இந்நிலையில் கோவை வந்த பயிற்சியாளர் பிரகாஷ் மற்றும் வெற்றியாளர்களுக்கு பொதுமக்கள்,பெற்றோர் மற்றும் நண்பர்கள் உற்சாக வரவேற்பு வழங்கினர் சர்வதேச அளவிலான சிலம்பம் போட்டியில் 24 மாணவர்கள் அபாரமான பயிற்சி,மற்றும் விடாமுயற்சியுடன் 66 பதக்கங்களை வென்றுள்ளதை பலரும் பாராட்டி வருகின்றனர்…