C K RAJAN
Cuddalore District Reporter
9488471235.…
கடலூர் மாவட்டத்தில் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நீர்வளத்துறை திட்டப்பணிகள் மற்றும் கடலூர் துறைமுகம் விரிவாக்க பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார் , மாவட்ட ஆட்சித்தலைவர்
சிபி ஆதித்யா செந்தில் குமார் தலைமையில் கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டத்திற்குட்பட்ட புதுகுளம் பெரிய ஓடையில் தடுப்பணை அமைத்தல், வெலிங்டன் நீர்த்தேக்க கரை மற்றும் பிரதான கால்வாய் புனரமைத்தல், கடலூர் துறைமுகம் விரிவாக்க பணிகள் ஆகிய திட்டப்பணிகளை துரிதப்படுத்துவது குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ப.ராஜ்குமார் தெரிவித்ததாவது,
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் பொதுமக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்திடும் வகையில் பல்வேறு துறைகளின் மூலம் நடைபெற்று வரும் திட்டப்பணிகளின் முன்னேற்றங்களை தொடர்ந்து கண்காணித்து துரிதமாக பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அறிவுறுத்தியுள்ளார். அதன்படி நீர்வளத்துறையின் மூலம் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான நீர் ஆதாரங்களை மேம்படுத்து வகையில் நடைபெற்று வரும் திட்டப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி திட்டக்குடி வட்டம், வெலிங்டன் நீர்தேக்கத்திற்கு கீழ்புறம் 7.70கி.மீ தொலைவில் புதுகுளம் கிராமத்தில் ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் பெரிய ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இத்தடுப்பணை 65மீ. நீளத்திற்கும் மற்றும் 1.20மீ. உயரத்திலும் அமைக்கப்படுகிறது. 1100 மீ. தடுப்பணையின் மேற்ப்புற கரையும், 500 மீ கீழ்புறக்கரையும் பலப்படுத்தப்படுகிறது. 2 எண்ணிக்கையிலான நீர் உள்வாங்கி மதகுகள் அமைக்கப்படுகிறது. இத்தடுப்பணை அமைவதன் மூலம் பெரிய ஓடையின் இரு பகுதிகளிலும் சுற்றியுள்ள 6 கிராமங்களில் உள்ள 85 எண்ணிகையிலான ஆழ்குழாய் கிணறுகள் செறிவூட்டப்படும்.சிறுமுளை, குமாரை, புதுக்குளம், சாத்தநத்தம், நிதிநத்தம் மற்றும் நாவலூர் ஆகிய கிராமங்களை சார்ந்த சுமார் 520 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் வசதி பெறும்.
வெலிங்டன் பகுதியில் ரூ.130.00 கோடி மதிப்பீட்டில் நீர்த்தேக்கக் கரை மற்றும் பிரதான கால்வாய் புனரமைத்து மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதில் வெலிங்டன் நீர்த்தேக்க கரை பலப்படுத்தும் பணி, நெடுகை 600 மீ முதல் 777மீ வரை உபரி நீர் வடிகாலை பாலத்துடன் கூடிய புதிய கட்டுமானமாக அமைக்கும் பணி, பிரதான கால்வாயின் இருபக்க உள்கரைகளில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடையும் பட்சத்தில் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் முழுக் கொள்ளளவில் தண்ணீரைத் தேக்கி வைக்க இயலும். இதன் மூலம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள 24,059 ஏக்கர் பாசன நிலங்கள் பயனடையும். விவசாயிகளின் வாழ்வதாரம் பாதுகாக்கப்படுவதுடன், பாசன நீர் விநியோகம் மேம்பட்டு வேளாண் உற்பத்தியும் அதிகரிக்கும்.
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக விளங்கி கொண்டிருக்கும் வெலிங்டன் நீர்த்தேக்கத்தில் நடைபெறும் கரை பலப்படுத்துதல் பணி மற்றும் பாலத்துடன் கூடிய வடிகால் கட்டுமான பணிகளை துரிதப்படுத்தி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடித்திவும், பணிகள் தரமாக நடைபெறவதை உறுதி செய்திடவும் நீர்வளத்துறை அலுவலர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடலூர் துறைமுகத்தில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் ஆண்டிற்கு சுமார் 50 லட்சம் மெட்ரிக் டன் அனைத்து வகை சரக்குகளையும் கையாளும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் 100 KLD திறன் கொண்ட கடல்நீரை குடிநீராக்கும் நிலையம் மற்றும் 25 KLD திறன் கொண்ட கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல். பழுதடைந்த கிடங்குகள் மற்றும் கட்டடங்கள் அகற்றப்பட்டு, 6 சேமிப்பு கிடங்குகள் மற்றும் 4 பயன்பாட்டு கட்டடங்கள், சுற்றுச்சுவர் அமைக்கப்படுகிறது. துறைமுக அலுவலக கட்டடத்தை புதுப்பித்தல், சேமிப்பு கிடங்கு மற்றும் சரக்குக் கையாளும் பகுதி நில மேம்பாட்டுப் பணிகள், சரக்கு வாகன நிறுத்தம் அமைத்தல், சரக்குக் கையாளும் உபகரணங்களை கொள்முதல் செய்தல் உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. துறைமுக விரிவாக்க பணிகள் நிறைவடையும் போது கடலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி துறைமுகப் பயனாளர்கள் தங்களது ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சரக்குகளை கடலூர் துறைமுகம் மூலமாக கையாள முடிவதால், தொலைதூர துறைமுகங்களைச் சார்ந்திருக்கும் நிலைமாறும். மேலும், இத்துறைமுக விரிவாக்கத்தின் மூலம் கடலூர் மாவட்ட மக்களின் பொருளாதார வளர்ச்சி மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். இதனால் பெருமளவில் வேலை வாய்ப்புகளும் உருவாகும். எனவே, துறைமுக விரிவாக்க பணிகளை விரைந்து முடிக்க தகுந்த நடவடிக்கை மேற்கொள்ளமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாண்புமிகு வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
ராஜ்குமார் தெரிவித்தார்.
ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் சுந்தரராஜன், விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் விஷ்ணுபிரியா, நீர்வளத்துறை செயற்பொறியாளர் பாலமுருகன், மீன் வளத்துறை உதவி இயக்குநர் நித்யபிரியதர்ஷினி,கடலூர் துறைமுகம் பாதுகாப்பாளர் விஜய், துறைமுக ஆட்சி அலுவலர் குமுதம் உட்பட பலர் உள்ளனர்.