.சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வட்டம் காட்டூரணி அய்யனார் கோயில் அருகே காட்டுப்பகுதியில் வித்தியாசமான கற்கள் இருப்பதாக வலசையைச் சேர்ந்த தருணேஷ்வரன் தகவல் கொடுத்தார். வரலாற்று ஆர்வலர் மீனாட்சி சுந்தரம், வரலாற்றுத்துறை பேராசிரியர் தங்கமுத்து, க.புதுக்குளம் சிவக்குமார் உள்ளிட்டோர் அங்கு சென்று கள மேற்பரப்பாய்வில் ஈடுபட்டனர். ஆய்வில் இப்பகுதியில் பழங்கால இரும்பு உருக்காலை எச்சங்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: இந்த பகுதியில் ஏராளமான இரும்பு உருக்கு கழிவுகள் பெரும் குவியலாக காணப்படுகிறது. பல துண்டு குழாய்களும் மேற்பரப்பிலே கள ஆய்வில் கண்டறியப்பட்டது. தற்போது வரை சிவகங்கை மாவட்டத்தில் மட்டும் பல்வேறு இடங்களில் இரும்பை உருக்கும் பழமையான உருக்காலைகள் எங்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த இரும்பு உருக்காலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை பார்க்கும்போது, இந்த மாவட்டத்தில் காணப்படும் அதிகப்படியான செம்பூரான் கற்களே இதற்கு காரணம் எனலாம். இப்பகுதியில் அதிகளவில் கிடைக்கும் செம்பூரான் கற்களும் செம்பூரான் பாறையிலேயே சற்றே தரமான கற்களும் இப்பகுதியில் அதிக அளவில் காணப்படுகிறது.

மேலும் இந்த பாறையில் இரும்பிற்கான மூலப்பொருள் இருப்பதையும் அதனை எரியூட்டி உருக்கினால் இரும்புப்பொருட்கள் செய்யலாம் என்பதையும் இப்பகுதி மக்கள் தெரிந்து வைத்திருந்தனர் என்று அறிய முடிகிறது.இதன் மூலம் பழங்காலத்தில் இங்கே வாழ்ந்த மக்கள், இரும்பு பொருட்களான கத்தி, கோடாரி, ஈட்டி, வாள் போன்ற ஆயுதங்களை தயாரிக்கும் தொழிற்கூடமாக இப்பகுதியை பயன்படுத்தியிருக்கலாம், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப்பகுதி இரும்பு காலத்தைச் சேர்ந்த ஆதிமனிதர்களின் வாழ்விடப் பகுதியாக இருந்திருக்கலாம். இரும்பு உருக்காலை கழிவுகள் ஒரு மேடான பகுதியில் கருகிய நிலையிலும் செம்பூரான் கற்கள் சிதைந்த நிலையில் அதிகளவில் காணப்படுகிறது.

சுடுமண்ணால் செய்யப்பட்ட பல குழாய்கள் மேற்பரப்பில் சிதைவுற்றுக் கிடக்கின்றன. இரும்பு உருக்கும் உலைகளில் பயன்படுத்தப்படும் கெண்டியின் பாகங்கள் இங்கு சிதைந்து கிடக்கின்றன. இப்பகுதியில், இரும்பை உருக்கும்போது கிடைக்கும் இரும்புக்கழிவுகள் அதிகளவில் கிடக்கின்றன. இரும்பு தாது இடம்பெறும் மூலப்பொருட்களான பெரிய செம்பூரான் கற்களும் ஏராளமாக இந்தப்பகுதியில் பரவிக்கிடக்கின்றன. இப்பகுதியில் தொல்லியல்துறை முறையான ஆய்வை மேற்கொண்டால், சிவகங்கை மாவட்டத்தின் பழங்கால இரும்பு உருக்காலையின் தொண்மையையும் வரலாறையும் அறியலாம் என்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *