பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலைப் பாதை சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்!

திண்டுக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் தமிழக முதல்வருக்கு கோரிக்கை!

பழனி முருகன் கோவில் மலை அடிவார கிரிவலைப் பாதை சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு திண்டுக்கல் அதிமுக கூட்டணி வேட்பாளர் முகம்மது முபாரக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக முதல்வர் தனிப்பிரிவுக்கு அவர் அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது;

“உலகம் முழுவதும் பிரசித்திப்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசம், பங்குனி உத்திரம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை உள்ளிட்ட விழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன. இந்த சமயங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் பெற்றுச் செல்கின்றனர். வருடத்தின் மற்ற மாதங்களைக் காட்டிலும் இந்த விழாக்கள் நடைபெறும் கார்த்திகை, மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய 5 மாதங்களில் பக்தர்களின் வருகை மிக அதிகளவில் காணப்படும். இந்த பழனி முருகன் கோவில் மலை அடிவாரத்தில் உள்ள கிரிவலப் பாதையில் ஆயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகள் பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகின்றனர். பழனி முருகன் கோவிலுக்கு வருகை தரும் பக்தர்களை நம்பியே அந்த பல்லாயிரக்கணக்கான சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரங்கள் உள்ளன.

இந்நிலையில், கிரிவலப் பாதையில் உள்ள சாலையோர வியாபாரிகளால் கூட்டநெரிசல் ஏற்பட்டு, பக்தர்களுக்கு சுவாமியை தரிசனம் செய்ய இடையூறு ஏற்படுவதாகவும், மலை அடிவாரத்தில் கிரிவலம் வரும் பாதைகளில் உள்ள கடைகளால் பக்தர்கள் அசௌகரியத்திற்கு ஆளாகிறார்கள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு இடையூறாக எவ்வித செயல்பாடும் இருக்கக் கூடாது எனவும்; வணிக நோக்கத்தில் எவ்வித செயல்பாடும் இருக்கக் கூடாது எனவும் உத்தரவிட்டு, கிரிவலப் பாதையில் உள்ள சாலையோர கடைகள் உள்பட அனைத்துவிதமான கடைகளையும் அகற்ற உத்தரவிட்டது. அந்த உத்தரவின் அடிப்படையில் அறநிலைத்துறை மற்றும் நகராட்சி நிர்வாகம் சாலையோர கடைகள் உள்பட அனைத்து வியாபார கடைகளையும் அகற்றியது. தொடர்ந்து அந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதை வழியாக வரும் பக்தர்களை நம்பியே ஆயிரக்கணக்கான சாலையோர கடைகள் உள்பட ஏராளமான கடைகள் உள்ளன. உயர்நீதிமன்ற உத்தரவை அறநிலைத்துறையும், நகராட்சி நிர்வாகமும் செயல்படுத்துவதன் மூலம் பல்லாயிரக்கணக்கானோரின் வாழ்வாதரங்களும் சேர்ந்தே பாதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை தொடங்கி பங்குனி வரையிலான 5 மாதங்களில் நடைபெறும் விசேஷ கால வியாபாரங்கள் மூலம் தான் இவர்களின் ஓராண்டு வாழ்வாதாரம் உள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தும் அறநிலைத்துறை மற்றும் நகராட்சியின் நடவடிக்கையால் அவர்களின் நிலை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிடும் நான் அந்த பகுதியில் பிரச்சாரம் செய்தபோது மக்களின் பிரதான கோரிக்கையாக இந்த பிரச்சினைதான் இடம்பிடித்தது. நீதிமன்றங்கள் பக்தர்களின் வசதிகளை கருத்தில்கொண்டு உத்தரவிட்ட அதேநேரத்தில், சுமார் 30 ஆயிரம் பேர் கொண்ட குடும்பங்களை கொண்ட சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதார நிலையையும் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்றே தோன்றுகிறது.

ஆகவே, இந்த விவகாரத்தில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும், அதேநேரம் 30 ஆயிரம் பேர் கொண்ட குடும்பங்களை கொண்ட சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படாத வகையில் திட்டங்களை வகுத்து, தமிழக அரசு இந்த வழக்கில் மேல்முறையீடு செய்திட வேண்டும். பழனி முருகன் கோவில் கிரிவலப் பாதையில் வியாபாரம் செய்து வந்த சாலையோர வியாபாரிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில் தேவையான நடவடிக்கையை தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் வரையில், அனைத்து தரப்பு வியாபாரிகளுக்கும் மாற்று இடம் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *