பெரம்பலூர்.நவ.14.பெரம்பலூரில் குழந்தைகள் தினத்தினை முன்னிட்டு குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் “என் நாள் என் உரிமை” என்ற தலைப்பில் கல்லூரி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணியை மாவட் ஆட்சித்தலைவர் மிருணாளினி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் முன்னாள் பாரத பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்களின் பிறந்த தினமான நவம்பர் 14 அன்று நாடுமுழுவதும் குழந்தைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து “என் நாள்; என் உரிமை” எனும் தலைப்பில் போக்சோ, குழந்தை திருமணம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை உள்ளிட்ட தகவல்களை பொதுமக்களுக்கு விளக்கிடும் வகையில் விழிப்புணர்வு நடைபயண பேரணியாக இது நடத்தபட்டது.
இப்பேரணியானது பாலக்கரையில் தொடங்கி ரோவர் வளைவு வரை நடைபெற்றது. இந்த பேரணியில் ரோவர் கல்வி குழுமத்தை சார்ந்த நர்சிங் மாணவிகள் மற்றும் வேளாண் கல்லூரியை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மாணவிகள், குழந்தைகள் நலன் சார்ந்த பிற துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இந்நடைப்பயண பேரணியில் தொடாதே! தொடாதே! குழந்தைகளை பாலுணர்வு நோக்கில் தொடாதே!! பச்சிளம் குழந்தைகளை உங்களது இச்சைக்கு பயன்படுத்தாதீர்கள்! பேசாதே! பேசாதே! குழந்தைகளிடம் பாலுணர்வு நோக்கில் பேசாதே!!
உன் விசில் குழந்தைகளிடம் பாய்ந்தால்! காவல் துறை விசில் உன்மீது பாயும்!! கொடுக்காதே! கொடுக்காதே! குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்காதே!! மறுக்காதே! மறுக்காதே! குழந்தைகளின் உரிமைகளை மறுக்காதே!! குழந்தைகளின் வருமானம்! சமுதாயத்தின் அவமானம்!! “சமூகத்தின் கரம் குழந்தைக்கு கல்வியின் மீது இருக்கட்டும், உழைப்பின் மீது அல்ல”. குழந்தைகளை கவனித்துக் கொள்வோம்! அவர்களின் எதிர்காலத்தை உருவாக்குவோம்!! போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவிகள் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, சமூகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்! குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிப்போம்!! நிகழ்வின் இறுதியில் குழந்தைகள் பாதுகாப்பு குறித்து இசை கல்லூரி மாணவர்களை கொண்டு விழிப்புணர்வு கலை நிகழ்சிகள் நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் சரவணன், மாவட்ட குழந்தைகள் நலக் குழுத் தலைவர் இந்திராகாந்தி, மாவட்ட இளைஞர் நிதிக்குழுமம் உறுப்பினர் சிவக்குமார், மாவட்ட நன்னடத்தை அலுவலர் பிரபு உள்ளிட்ட அலுவலர்கள் கலந்துகொண்டனர்.