திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் சார்பில் ஒரு பக்கம் ஒரு கருப் பொருள் அஞ்சல்தலை காட்சிப்படுத்தும் பயிற்சி பட்டறை திருச்சியில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி பிளாட்டலிக் கிளப் செயலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் துவக்க உரையாற்றினார்.
நிறுவனர் நாசர் துணைத் தலைவர் காசிநாத் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். பன்னாட்டு விருது பெற்ற அஞ்சல் தலை சேகரிப்பாளர் லால்குடி விஜயகுமார் ஒரு பக்கம் ஒரு கருப்பொருள் அஞ்சலை காட்சிப்படுத்தும் பயிற்சி பட்டறையில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசுகையில்,அஞ்சல் தலை என்பது ஒரு நாட்டின் வரலாறு, பண்பாடு, கலை, அறிவியல், இயற்கை வளங்கள் மற்றும் தேசியத் தலைவர்களின் பெருமைகளை உலகிற்கு எடுத்துரைக்கும் சிறிய ஆவணமாகும். ஒவ்வொரு அஞ்சல் தலையும் ஒரு காலகட்டத்தின் சமூக மற்றும் கலாச்சார அடையாளத்தைப் பதிவு செய்யும் வரலாற்றுச் சின்னமாக விளங்குகிறது.
அஞ்சல் தலைகளை பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்துவது கல்வி மற்றும் விழிப்புணர்வு நோக்கில் மிகவும் பயனுள்ளதாகும். காட்சிப்படுத்தும் போது காட்சிப்படுத்தப்படும் அஞ்சல் தலை கருப்பொருளுக்கு தகுந்த தெளிவான தலைப்பை இட வேண்டும்.அஞ்சல் தலை சேதமடையாமல் இருக்க வெளிப்படையான பாதுகாப்பு உறை (Stamp Mount) அல்லது பிளாஸ்டிக் பாக்கெட்டில் பொருத்த வேண்டும்.காட்சிப்படுத்தும் அஞ்சல் தலை , அஞ்சல் முத்திரை, அஞ்சல் உறை வெளியிடப்பட்ட ஆண்டு, நாடு, மதிப்பு, வெளியீட்டின் நோக்கம் மற்றும் அதன் சிறப்பம்சங்களை சுருக்கமாக குறிப்பிட வேண்டும். கருப்பொருள் தலைப்பின் அடிப்படையில் காட்சிப்படுத்த வேண்டும்.
சமமான இடைவெளியுடன் காட்சிப்படுத்த வேண்டும். முத்திரையிப்பட்ட அஞ்சல் உறை
அஞ்சல் தலையினை காட்சிப்படுத்தும் போது அஞ்சல் தலை மற்றும் அஞ்சல் முத்திரை தெரியும் வகையில் காட்சிப்படுத்தும் விளக்க அட்டையில் ஜன்னல் (window)போல அமைத்து காட்சிப்படுத்த வேண்டும்.
காட்சிப்படுத்தும் ஒவ்வொரு அஞ்சல் தலைக்கும் அதன் வெளியீட்டு ஆண்டு, நாடு, முகப்பு மதிப்பு, வெளியீட்டின் காரணம் மற்றும் சிறப்பம்சங்கள் ஆகியவை தனித்தனியாக விளக்க அட்டையில் குறிப்பிடப்பட வேண்டும்.
இதன் மூலம் பார்வையாளர்கள் அஞ்சல் தலைகளின் வரலாற்றுப் பின்னணியையும் முக்கியத்துவத்தையும் எளிதில் அறிந்து கொள்ள முடியும்.அஞ்சல் தலை காட்சிப்படுத்தும் முறை என்பது வெறும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி அல்ல; அது வரலாறு, பண்பாடு மற்றும் அறிவை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சிறந்த கல்வித் திட்டமாகும். இத்தகைய காட்சிகள் அஞ்சல் தலை சேகரிப்பாளரிடையே தேடல் மனப்பான்மை, பொது அறிவைத் தரும் பொழுதுபோக்கு உணர்வை வளர்க்கும் என்றார்.
அஞ்சல் தலை சேகரிப்பாளர்கள் அன்பழக பாண்டியன், ஜலால், முகமது சுபேர் உட்படப்பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக அஞ்சல் தலை சேகரிப்பாளர் இளம்வழுதி வரவேற்க, நிறைவாக சிவக்குமார் நன்றி கூறினார்.