கோவை
கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் சாதனையாளர்களுக்கான
லெகஷி விருது வழங்கும் விழா.
கோயம்புத்தூர் கேபிஆர் கல்விக்குழுமங்களின் சார்பில் பல்துறைச் சாதனையாளர்களைக் கெளரவிக்கும் லெகஷி விருது வழங்கும் விழா கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. கேபிஆர் கல்விக்குழுமங்கள் ஆண்டுதோறும் கல்வி மற்றும் ஆராய்ச்சித்துறையில் சிறப்பான பங்களிப்பை வழங்கிய சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறந்த ஆய்வறிஞர், இளம் நட்சத்திரச் சாதனையாளர், வாழ்நாள் சாதனையாளர், சிறந்த பேராசிரியர் மற்றும் சிறந்த முன்னாள் மாணவர் போன்ற பிரிவுகளின்கீழ் விருதினையும் பரிசுத்தொகையினையும் வழங்கி வருகிறது.
இவ்வாண்டு நடைபெற்ற லெகஷி விருதிற்கு 14 மாநிலங்களிலிருந்து 1200க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்திருந்தனர். அவ்விண்ணப்பங்களை வல்லுநத்துவமுடைய நடுவர் குழுவினர் முறைப்படுத்தி, விருதிற்கான விதிமுறைகளின் அடிப்படையில் தேர்வுசெய்தனர். அதில் அமெட் நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் வி.ராஜேந்திரன் வாழ்நாள் சாதனையாளர் விருதும் 50,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
சிறந்த பேராசிரியர் விருதிற்கான பிரிவில், பாலக்காட்டில் உள்ள இந்தியன் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் சாந்தக்குமார் மோகன் மற்றும் வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டாக்டர் ஜெயகிருஷ்ண கந்தசாமி முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
சிறந்த ஆய்வறிஞர் பிரிவில் பாரதியார் பல்கலைக்கழக வணிகவியல் புலமுதன்மையர் டாக்டர் எம்.சுமதி, காருண்யா அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனத்தின் வேதியியல் துறைப் பேராசிரியர் டாக்டர் ஆர்.நந்தகுமார், தன்பாத் இந்தியன் தொழிற்நுட்ப நிறுவனத்தின் பேராசிரியர் டாக்டர் பார்த பிரத்திம் ராய், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் டாக்டர் கார்த்திகேயன் முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இளம் நட்சத்திரச் சாதனையாளர் பிரிவில் கலசலிங்கம் கல்வியியல் மற்றும் ஆராய்ச்சிக் கழகத்தின் இணைப்பேராசிரியர் டாக்டர் ஆர்.ராஜசுப்பிரமணியன், எஸ் ஆர் எம் அறிவியல் மற்றும் தொழிற்நுட்ப நிறுவனத்தின் இணைப்பேராசிரியர் டாக்டர் எஸ்.சாம் டேவிட் முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. சிறந்த முன்னாள் மாணவர்களுக்கான பிரிவில் கேபிஆர் கல்விக்குழுமத்தைச் சார்ந்த, தனவிக்னேஷ், ரத்னசபரீஷ், பிரேம்குமார், பிரியவர்ஷனா முதலியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதும் 25,000 பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது.
இவ்விருது வழங்கும் விழாவிற்குக் கேபிஆர் கல்விக்குழுமங்களின் தலைவர் டாக்டர் கே.பி.ராமசாமி தலைமையேற்று, “தன்னம்பிக்கையுடன் கூடிய முயற்சியே சாதனையாளர்களை உருவாக்குகிறது” எனக் கூறினார்.
இவ்விழாவின் சிறப்பு விருந்தினராய், குமரகுரு நிறுவனங்களின் தலைவர் டாக்டர் பி.கே.கிருஷ்ணராஜ் வானவராயர் கலந்துகொண்டு, “தொழில் நிலையில் வளர்ச்சி காண்பதோடு, சமூகத்தின் உயர்வுக்குரிய கல்விசார் அறச்செயல்களையும் கேபிஆர் கல்விக்குழுமம் தொடர்ந்து செய்து வருகிறது” எனப் பாராட்டினார். இந்நிகழ்விற்கான வாழ்த்துரையைக் கல்லூரிச் செயலர் காயத்ரி அனந்தகிருஷ்ணன் வழங்கினார்.
லெகஷி விருதினை வழங்குவதற்கான நோக்கம் பற்றிய அறிமுகவுரையைக் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் முனைவர் அகிலா முத்துராமலிங்கம் அவர்கள் வழங்கினார். இந்நிகழ்விற்கான வரவேற்புரையைக் கேபிஆர் பொறியியல் மற்றும் தொழிற்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.தேவிப்பிரியா அவர்கள் வழங்கிட, நன்றியுரையைக் கேபிஆர் கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் முதல்வர் முனைவர் பி.கீதா வழங்கினார்.
சமூகத்தில் தம் திறமையின் மூலம் ஆளுமை செலுத்தும் சாதனையாளர்களை இனங்கண்டு கெளரவிக்கும் இவ்விழாவில் ஆராய்ச்சியாளர்கள், பல்துறை வித்தகர்கள், கேபிஆர் கல்விக்குழுமங்களின் புலமுதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், நிர்வாக உறுப்பினர்கள், இளம் ஆய்வாளர்கள் முதலியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.