திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள 24 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பயன்பெறும் விதமாக 1,045 குளம், குட்டைகளில் நீர் செறிவூட்டும் வகையிலான அத்திக்கடவு-அவிநாசி திட்டப்பணி நிறைவுற்று வெள்ளோட்டம் பார்க்கப்படுகிறது. முதல் நீரேற்ற நிலையம் அமைந்துள்ள காலிங்கராயன் பகுதியில் இருந்து தண்ணீர் பம்ப் செய்யப்பட்டு ஆங்காங்கே உள்ள ஐந்து நீரேற்ற நிலையங்களுக்கும் குழாய் வழியாக நீர் பம்ப் செய்யப்பட்டு குழாயில் ஏற்படும் கசிவு, உடைப்பு ஆகியவை கண்காணிக்கப்பட்டு வருகிறது. குழாயில் திறந்துவிடப்படும் தண்ணீர் திட்டம் சார்ந்த குளம், குட்டைகளில் சேகரமாகிறது. தற்போது திருப்பூர் மாவட்டம் அவிநாசி சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளில் தண்ணீர் திறந்துவிடப்பட்டு வினியோகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. சில இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அவ்வாறு விழும் தண்ணீரை, அப்பகுதியில் வசிக்கும் கிராம மக்கள் மலர் தூவியும், ஆரத்தி எடுத்தும் வரவேற்கின்றனர். அவ்வகையில் தொரவலூரில் விவசாயிகள் சிலர் தண்ணீரை வணங்கி மரியாதை செலுத்தி கூறுகையில், அத்திக்கடவு திட்டம் என்பது எங்களின் 60 ஆண்டுகால கனவு. தற்போது அது நனவாகும் நிலையில் உள்ளது. இதனால் விவசாய நிலங்கள் செழிப்படையும் என நம்புகிறோம் என்றனர். திட்ட கண்காணிப்பு பொறியாளர் சிவலிங்கம் கூறுகையில், சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்றார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *