பெரம்பலூர்.நவ.20. பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி. அனைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் இணைந்து 27.11.2025 அன்று நடத்தப்படவுள்ள கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாமினை நடத்த மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் ந.மிருணாளினி, தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது,தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய அளவில், தமிழகத்தை கல்வியில் முன்னோடி மாநிலமாக்கும் நோக்கத்தோடு எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள். எந்தவொரு காரணத்திற்காகவும் மாணவ மாணவிகளின் கல்வி தடைப்பட்டு விடக்கூடாது என்பதற்காக காலை உணவு திட்டம், இலவச கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம், நான் முதல்வன் போன்ற எண்ணற்ற திட்டங்களை தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வருகிறார்கள்.
அதனடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் மாணவ, மாணவிகள் கல்வி பயில்வதை ஊக்குவிக்கும் வகையில் 27.11.2025 அன்று கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக் கடன் முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிராமப்புறங்களில் பொருளாதாரத்தின் காரணமாக, தங்களது உயர்கல்வியை தொடர முடியாத சூழ்நிலையில் உள்ள மாணவ மாணவிகளை கண்டறிந்து அவர்களுக்கு இந்த முகாமின் மூலம் கல்விகடன் கிடைக்க வழிவகை செய்ய அனைத்துத்துறை அலுவலர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
மேலும் பிற மாவட்டத்தில் கல்வி பயின்று வரும் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் கல்விக்கடன் முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என கல்வி நிறுவனங்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். கல்வி நிறுவனங்கள் கடன் உதவி பெற தேவையான ஆவணங்களை மாணவ,மாணவிகளுக்கு தயார்படுத்தி கொடுப்பதோடு, இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்க வேண்டும்.
ஆதிதிராவிடர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் விடுதிகளில் தங்கி பயின்று வரும் மாணவ,மாணவிகளுக்கு கல்வி கடன் முகாம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி உயர்கல்வியை தொடர வழிவகை செய்ய வேண்டும். வேண்டும்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளில் ஈடுபட்டு வரும் மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கணக்கீட்டு படிவத்தினை திரும்ப பெற வீடு, வீடாக செல்லும்போது, கல்விகடன் முகாம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்திட வேண்டும்.
அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இந்த கல்வி கடன் முகாமில் அதிகப்படியான மாணவ,மாணவிகள் கலந்துகொண்டு பயன்பெற செய்ய வேண்டும்.
இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வைத்தியநாதன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் பரத்குமார், மாவட்ட ஆட்சியரக பொது மேலாளர் சரவணன் மற்றும் வங்கியாளர்கள், கல்வி நிறுவனங்களைச் சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.