மகளிர் கட்டணில்லா பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, ‘வெற்றிப் பயணம்’ என்ற திட்டத்தை சென்னை கோயம்பேட்டில் முதல்வர் விஜய் இன்று(அக். 2) தொடக்கி வைத்தார்.
அரசுப் பேருந்துகளில் ஏறிய முதல்வர் விஜய், பேருந்துகளில் பயணித்த பெண்களுக்கு கட்டணமில்லா டிக்கெட்டை வழங்கினார். பின்னர், பெண்கள் முதல்வர் விஜய்க்கு சாக்லேட்டுகளை வழங்கினார்கள்.
வெற்றிப் பயணம் திட்டம் மூலம் முதல் கட்டமாக, மாநகரம், நகரங்களில் சாதாரணப் பேருந்துகள் மட்டுமன்றி எக்ஸ்பிரஸ், எல்எஸ்எஸ், டீலக்ஸ் அரசுப் பேருந்துகளிலும், மகளிர் இலவசமாகப் பயணிக்கலாம்.கூடுதலாக, மாவட்டங்களுக்கு இடையே பயணம் மேற்கொள்ள ஏதுவாக புறநகர் மற்றும் மலைப் பகுதிகளில், சாதாரண கட்டணப் பேருந்துகளிலும் மகளிர் கட்டணமின்றி பயணிக்கலாம்.
இத்திட்டத்தின் மூலம் இந்த சேவை மாநகர, நகர்ப் பகுதி, புறநகர், சாதாரண பேருந்துகள், 40 கி.மீ.க்கு மேற்பட்ட மலைப்பகுதி சாதாரணப் பேருந்துகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
இதற்கு வருமான உச்சவரம்போ, பயண எண்ணிக்கை கட்டுப்பாடுகளோ இல்லை. திருநர்களும் இலவசமாகப் பயணிக்கலாம்.இதைச் செயல்படுத்த ஆண்டுதோறும் ரூ.6,000 கோடி செலவு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது
இதன்மூலம், 7 அரசு போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் மொத்த 18,413 திட்டமிடப்பட்ட பேருந்துகளில் 12,692 பேருந்துகள் (69 விழுக்காடு), மொத்த 1,94,649 நடைகளில் (Singles) 1,65,312 நடைகள் (85 விழுக்காடு) இயக்கப்படும்.நாளொன்றுக்கு சுமார் 84.32 லட்சம் மகளிர் இத்திட்டத்தின்மூலம் பயன்பெறுவார்கள்.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) நடைமுறையில் உள்ளதால், செங்கல்பட்டு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் (MCC) விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இத்திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.