வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடைபெற்றது, விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்தி பெற்ற ஆபத் சகாயேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது.

சோழவள நாட்டில் உள்ள தேவார பாடல் பெற்ற 274 தலங்களில், காவிரிக்கு தென்கரையில் உள்ள 127 பழங்களில் 98 -வது தலமாக இந்த ஆலயம் விளங்குகிறது. பாற்கடலை கடைந்த போது ஏற்பட்ட ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றியதால் இத்தல இறைவனுக்கு ஆபத் சகாயேஸ்வரர் என்ற பெயர் ஏற்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறும்.

இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது. நேற்று மாலை 5:19 மணிக்கு குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சி அடைந்ததை ஒட்டி இந்த ஆலயத்தில் உள்ள குரு பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இந்த குரு பெயர்ச்சி விழாவில் கலந்து கொள்வதற்காக நேற்று காலை முதல் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிமாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்த வண்ணமாக இருந்தனர். குரு பெயர்ச்சி நடைபெற்ற நேரத்தில் குரு பகவானுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்ட போது, கோவில் வளாகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மிகுந்த பய பக்தி உடன் சுவாமி தரிசனம் செய்தனர்.

முன்னதாக குரு பெயர்ச்சி முன்னிட்டு நேற்று முன் தினம் இரவு புனித நீர் நிரப்பப்பட்ட 108 கலசங்களுக்கு சிறப்பு யாகமும், அதனைத் தொடர்ந்து குரு பகவானுக்கு கலசாபிஷேகமும் நடைபெற்றது. நேற்று அதிகாலை சிறப்பு குரு பரிகார ஓமமும் அனைத் தொடர்ந்து அனைத்து சன்னதிகளில் சிறப்பு அபிஷேக,ஆராதனையும் நடைபெற்றது.

குரு பகவானுக்கு தங்க கவசத்துடன் சர்வ அலங்காரம் செய்யப்பட்டது. கலங்காமற் காத்த விநாயகர், ஆபத் சகாயேஸ்வரர், ஏலவார்குழலி அம்மன், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், சனீஸ்வரர் ஆகிய சன்னதியில் சந்தன காப்பு அலங்காரமும் செய்யப்பட்டிருந்தது. உற்சவ தட்சிணாமூர்த்திக்கு மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

அதிகாலை முதலே ஆயிரகணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குரு பகவானை தரிசனம் செய்தனர். இதனால் ஆலய வளாகம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

குரு பெயர்ச்சியின் போது ரிஷபம், மிதுனம், சிம்மம், துலாம், தனுஷ், கும்பம், மீனம் மற்றும் இதர ராசிக்காரர்களும் குரு பகவானை நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களின் நலன் கருதி திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ உத்தரவின் பேரில் அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். குரு பெயர்ச்சி விழா ஏற்பாடுகளை ஆலய தக்கார் ராமு, ஆலய செயல் அலுவலர் சூரிய நாராயணன், ஆலய கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். ஆலங்குடி குரு பகவான் ஆலயத்தில் குரு பெயர்ச்சி இரண்டாவது கட்ட லட்சார்ச்சனை வருகிற 6- ஆம் தேதி (திங்கட்கிழமை) தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 9:30 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 4:30 மணி முதல் இரவு 7:30 மணி வரையிலும் லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *