அக்டோபர் 02
நாமக்கல்.
தலைமலை

பொதுமக்களின் பாதுகாப்பிற்காக தலைமலை சேவா டிரஸ்ட் முன்னெடுப்பு – இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையர் இளையராஜா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல் மாவட்டம், வடவத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தலைமலை காப்புவனத்தின் உச்சியில் அருள்பாலிக்கும் அருள்மிகு ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாளைத் தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பொதுமக்களும் பக்தர்களும் வருகை தருகின்றனர்.

இதிகாச வரலாற்றின்படி, ஆஞ்சநேயர் சஞ்சீவி மூலிகை மலையைத் தனது கையில் ஏந்திச் சென்றபோது, அதன் தலைப்பகுதி கீழே விழுந்து உருவான மலையே தலைமலை என்று போற்றப்படுகிறது. இத்தகைய ஆன்மிக மற்றும் வரலாற்றுப் பெருமை கொண்ட தலைமலையின் உச்சிக்குச் செல்லும் பொதுமக்களின் பாதுகாப்பும் நலனும் நீண்டகாலமாக கவனம் பெற வேண்டிய முக்கியத் தேவையாக இருந்து வந்தது.

குறிப்பாக, மலை உச்சியில் தரிசனத்திற்குச் செல்லும் பொதுமக்களுக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டால் முதலுதவி அளிப்பதற்கும், பாதிக்கப்பட்டவர்களை மலை உச்சியிலிருந்து அடிவாரத்திற்குப் பாதுகாப்பாக அழைத்து வருவதற்கும் உரிய வசதிகள் இல்லாத நிலை இருந்து வந்தது.

இந்தச் சூழலில், தலைமலை ஸ்ரீ சஞ்சீவிராய பெருமாள் திருக்கோவிலின் செயல் அலுவலரும், நாமக்கல் ஆஞ்சநேயர் திருக்கோவிலின் உதவி ஆணையருமான இளையராஜா, தலைமலையில் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வதற்கான முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார்.

அதன் ஒரு முக்கிய முயற்சியாக, மலைக்கு வருகை தரும் பொதுமக்களின் அவசரகாலத் தேவைகளைக் கருத்தில் கொண்டு, அவசர நேரங்களில் பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் உதவியாக இருக்கும் வகையில் டோலி வசதி ஏற்படுத்த வேண்டும் என உதவி ஆணையர் இளையராஜா முடிவு செய்தார்.

இந்நிலையில், தலைமலை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மக்கள் நலப் பணிகளைச் சிறப்பாக மேற்கொண்டு வரும் தலைமலை சேவா டிரஸ்ட் மூலம் டோலி வசதியை ஏற்படுத்தித் தருமாறு அவர் கேட்டுக்கொண்டார். குறிப்பாக, எருமைப்பட்டியில் உள்ள ஊர்க் குளத்தைத் தூர்வாரி நீர்வளத்தைப் பெருக்கியது, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சாவடி அமைத்தது, தலைமலை மலைப்பகுதிகளில் விதைப்பந்துகளைத் தூவி மரங்கள் வளர்வதற்கு உறுதுணையாக இருந்தது, பள்ளிக் குழந்தைகளுக்கு எண் சுவடி’ வழங்கி கல்வி வளர்ச்சிக்கு உதவியது, மாணவர்களின் திறன் மேம்பாட்டிற்காக வழிகாட்டி வருவது, தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானம் உள்ளிட்ட பல்வேறு
நலப் பணிகளை செய்து வருவது போன்ற பணிகளை தலைமலை சேவா டிரஸ்ட் சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து, தலைமலை சேவா டிரஸ்ட் பொதுநல அறக்கட்டளையின் மூலம் தன்னார்வலர்களின் உதவியுடன் இலவச டோலி சேவையைச் செயல்படுத்துமாறு உதவி ஆணையர் இளையராஜா கோரிக்கை விடுத்தார்.

அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி ராஜேஷ் அவர்கள், பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, தலைமலை சேவா டிரஸ்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் ஆதரவுடன், இரண்டு டோலிகள் மற்றும் 10 பயிற்சி பெற்ற தன்னார்வலர்களைக் கொண்டு இலவச அவசர உதவிச் சேவையைத் தொடங்க ஏற்பாடு செய்தார்.

இரண்டு டோலிகளுக்கான நிதி உதவியை நாமக்கல் கிரீன் பார்க் நிர்வாக இயக்குநர் சரவணன் தலைமலை சேவா டிரஸ்டிற்கு வழங்கியுள்ளார்.

இதன் தொடக்க விழா தலைமலை அடிவாரம், வரதராஜபுரத்தில் நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட உதவி ஆணையர் திரு. இளையராஜா அவர்கள் கொடியசைத்து டோலி சேவையைத் தொடங்கி வைத்தார்.

மேலும், இப்பணியில் ஈடுபடும் தன்னார்வலர்களுக்கு தலைமலை சேவா டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் அக்னி ராஜேஷ் அவர்கள் கையொப்பமிட்டு வழங்கிய அடையாள அட்டைகளை ஒவ்வொருவருக்கும் அணிவித்து, அவர்களின் தன்னலமற்ற பொதுநலப் பணியைப் பாராட்டி வாழ்த்துத் தெரிவித்தார்.

தலைமலை வரலாற்றில் பொதுமக்களின் அவசர உதவிக்காகத் தன்னார்வலர்கள் மூலம் தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில் டோலி சேவை தொடங்கப்பட்டிருப்பது ஒரு முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

மலைப்பாதையில் எதிர்பாராத உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும் நேரங்களில், பாதிக்கப்பட்டவர்களை அடிவாரத்திற்குக் கொண்டு வருவதற்கான உதவியை வழங்கும் இந்த முன்னெடுப்பு, பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தலைமலை மலைப்பகுதிகளில் பொதுமக்களால் போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து அப்புறப்படுத்துதல், மலைக்கு வருகை தரும் பொதுமக்களுக்கு வழிகாட்டுதல், நெரிசல் ஏற்படும் சூழ்நிலைகளில் பொதுமக்களுக்கு உதவுதல் உள்ளிட்ட பணிகளிலும் இந்தத் தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

முன்னதாக, விழாவிற்கு வருகை தந்த உதவி ஆணையர் திரு. இளையராஜா அவர்களுக்குத் தலைமலை சேவா டிரஸ்ட் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் தலைமலை சேவா டிரஸ்டின் உயர்மட்ட ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் வி. துரைசாமி, வெங்கடாசலம், தினகரன், கலிங்கன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஆன்மிகப் பெருமை மிக்க தலைமலையில், பொதுமக்களின் உயிர் பாதுகாப்பையும் மனிதநேயத் தொண்டையும் முன்னிறுத்தி தலைமலை சேவா டிரஸ்ட் மூலம் தொடங்கப்பட்டுள்ள இந்த இலவச டோலி சேவை,மக்கள் சேவையே இறைப்பணி என்ற உயரிய நோக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *