மக்கள் மத்தியில் தனது இருப்பை காட்டிக்கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. சென்னை: தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து 22 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கவர்னர் ஆர்.என்.ரவி அரசிடம் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பி உள்ளார். இதற்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் எழுதி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் விஷ சாராயம் குடித்து பலர் உயிரிழந்த வேதனையில் அரசியல் நடத்திட சில அரசியல் ஆத்திரக்காரர்கள் முற்பட்டுள்ள நிலையில் நமது கவர்னர் ஆர்.என்.ரவியும் தன் பங்குக்கு அந்த துயர சம்பவத்தில் விளம்பர வெளிச்சம் தேட முற்பட்டுள்ளார். கவர்னர் விரிவான விளக்க அறிக்கை கேட்பதில் என்ன தவறு? என்று சிலர் கேட்கட்டும். கவர்னர் கேட்பதில் தவறு இல்லை. கேட்டவிதம் தான், அவர் எத்தகைய விஷமத்தனத்தோடு விஷம் கக்கி உள்ளார் என்பதை வெளிப்படையாக்குகிறது. நடந்தவை குறித்து முழு விவரங்களை அரசின் மூத்த அதிகாரியை தொலைபேசியிலோ, நேரிலோ அழைத்து அறிந்துகொள்ள கவர்னரால் முடியும் என்றாலும் அப்படி செய்யாது அதனை ஒரு அறிக்கையாக வெளியிட்டு ஊடகங்களுக்கு அனுப்பி தான் ஏதோ பெரிய செயலை செய்துவிட்டதாக எண்ணும் சிறுபிள்ளைத்தனம் தான், கவர்னரின் நெஞ்சம் எல்லாம் எவ்வளவு வஞ்சம் உள்ளது என்பதை உணர்த்துகிறது. கவர்னர் ரவி விளக்கம் கேட்டு அனுப்பியுள்ள அறிக்கையின் ஒவ்வொரு வரியிலும் விளக்கம் என்ற பேரில் கேட்டுள்ள சில கேள்விகள் அவரது அரசியல் தெளிவற்ற தன்மையின் மொத்த வெளிப்பாடு மட்டுமல்ல, அவர் கழக அரசை நோக்கி பாய்ந்து எழுப்பியுள்ள ஒவ்வொரு கேள்வியும், அவரது எஜமானர்கள் மேற்பார்வையில் நடக்கின்ற குஜராத் அரசையும் தாக்கி கடித்து குதறும் என்பதை அறியாமல் அசட்டு கேள்விகளை எழுப்பி உள்ளார். இந்த கேள்விகளை அரசிடம் எழுப்பும் முன் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெறும் குஜராத், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் நூற்றுக்கணக்கானோர் விஷ சாராயம் குடித்து பலியானார்களே, அப்போது அங்குள்ள கவர்னர்கள் இப்படி விஷமத்தனத்தோடு ஆளும் பா.ஜ.க. அரசிடம் விளக்கம் கேட்டு அறிக்கை வெளியிட்டனரா? என்பதையாவது கேட்டறிந்திருக்க வேண்டாமா? நடந்துவிட்ட விஷ சாராய சாவுகள் குறித்தும் அதன் காரணமாக அரசு எடுத்திடும் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் ஊடகங்கள், ஏடுகளில் செய்திகள் தெளிவாக வந்து கொண்டிருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடைபெற்றுவிடக்கூடாதே என்று மிகுந்த எச்சரிக்கையோடு அரசின் எல்லாவித சக்திகளும் முடுக்கப்படுகின்றன. இதற்கு தேவையான அரசு எந்திரங்கள் விரைவாக செயல்பட என்னென்ன செய்ய வேண்டும் என்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் உடனடி ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முழு வீச்சுடன் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த நேரத்தில் மக்கள் மத்தியில் தனது இருப்பை காட்டிக்கொள்ள கவர்னர் ஆர்.என்.ரவி அறிக்கை வெளியிட்டுக்கொண்டிருக்கிறார். விபரம் தெரியாத அரசியல்வாதிபோல கேள்விகளை எழுப்பி கொண்டிருக்கிறார். கவர்னர் ரவிக்கு ஒரே நாளில் தமிழ்நாட்டில் 2 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதும், கள்ளச்சாராயம் இல்லை என்றால் அவ்வளவு பேரை கைது செய்ய அவசியம் ஏன் ஏற்பட்டது என்றும் சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சந்தேகத்தை தமிழ்நாடு தலைமை செயலாளரிடம் கேட்டு அறிக்கை தாக்கல் செய்யக்கோருவதை விடுத்து இதுபோன்று 2 ஆயிரம் பேரை ஏன் கைது செய்ய வேண்டும் என குஜராத் கவர்னருக்கு ஒரு தொலைபேசி போட்டு கேட்டிருந்தால் அவர் விளக்கி இருப்பார். குஜராத் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. காந்தி பிறந்த அந்த மாநிலத்தில் காந்தியார் பிறந்த இல்லத்துக்கு அருகில் எல்லாம் கள்ளச்சாராயம் மலிவு சரக்காக விற்பனையாவதாக பல நேரங்களில் புகைப்பட ஆதாரங்களுடன் ஏடுகளில் செய்திகள் வந்தன. அந்த குஜராத் மாநிலத்தில் கவர்னர் ரவிக்கு இஷ்டமான பா.ஜனதா கட்சியின் ஆன்மீக அரசியல் தான் பல ஆண்டு காலமாக நடந்து வருகிறது. எல்லாம் அறிந்ததாக அதிமேதாவியாக தன்னை கருதிக்கொண்டு அவ்வப்போது செயல்பட்டு வரும் கவர்னர் ரவிக்கு இது தெரியாதிருக்க நியாயமில்லை. கவர்னர் ரவி விளம்பர வெளிச்சத்தில் இருக்க நினைத்தால் தனது பதவியை துறந்து அண்ணாமலைபோல ஏதாவது ஒரு மாநிலத்தின் பா.ஜனதா தலைவராக ஆகிவிடலாம். அதைவிடுத்து தாறுமாறாக செயல்பட்டு கவர்னர் பதவிக்குரிய தகுதியை சீரழிக்கும் வேலையை தொடர்ந்து செய்து வருவதை நிறுத்துவது நாட்டுக்கு நல்லது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *