தமிழகம் முழுவதும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியின்போது அம்மா உணவகங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகிறது. தற்போது தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற போதிலும் அம்மா உணவகங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. எக்காரணத்தை கொண்டும் அம்மா உணவகங்கள் மூடப்படாது என்று அரசு அறிவித்துள்ளது.அந்த வகையில் திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையத்தில் அம்மா உணவகம் அமைந்துள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு சுமார் 300-க்கும் மேற்பட்டோர் உணவருந்தி பசியாறி வருகிறார்கள். இந்த அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு, மளிகை மற்றும் காய்கறி உள்ளிட்டவை அங்குள்ள மார்க்கெட்டில் இருந்து கொண்டு வரப்படுகிறது.இந்த நிலையில் நேற்று நகராட்சி குப்பை அள்ளும் வாகனத்தில் சேகரிக்கப்பட்ட குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் எடுத்து சென்றனர். பின்னர் அதனை குப்பை கிடங்கில் கொட்டிவிட்டு மீண்டும் வரும் வழியில் அம்மா உணவகத்திற்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருட்களை அதே குப்பை சேகரிக்கும் வாகனத்தில் எடுத்து வந்தனர். அம்மா உணவகத்தில் அதே துப்புரவு பணியாளர்கள் இறக்கி வைத்துள்ளனர். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.அம்மா உணவகத்திற்கு கொண்டு வரப்பட்ட பொருட்கள் சற்றும் சுகாதாரமற்ற முறையில் எடுத்து வரப்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது தொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *