மன்னார்குடி,
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே சவளக்காரன் கிராமத்தில் ஆதிதிராவிடர் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் ராமபுரம், கீழநாலாநல்லூர், மேலநாலாநல்லூர் வேங்கைபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து ஏழை எளிய விவசாய கூலி தொழிலாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாணவ மாணவியர்கள் 150க்கும் மேற்பட்டோர் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியின் அருகாமையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத குளம் ஒன்று இருந்து வருகிறது. இந்த குளத்தில் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக பள்ளி கட்டிடம் முழுவதும் மழைநீர் சூழ்ந்துள்ளதால் கட்டடம் சேதமடைந்து காணப்படுகிறது.
பள்ளியின் உட்புறம் ஈரம் காணப்படுவதால் மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு நோய்த் தொற்றுகள் ஏற்படும் அபாயம் இருந்து வருகிறது. இதுகுறித்து பலமுறை பள்ளி நிர்வாகம் மற்றும் குழந்தைகளின் பெற்றோர்கள் வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியம் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும் இதுவரையிலும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே இந்த பள்ளியின் நிலையை அறிந்து மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுத்து ஆதிதிராவிட தொடக்கப்பள்ளி அருகாமையில் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள அந்தக் குளத்தை மண் அடித்து தூர்த்து தர வேண்டும் என அந்த பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.