தமிழ்நாடு மீனவர்கள் கைது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். சென்னை, இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட, 15 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- தமிழக மீனவர்கள் 15 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவித்திடத் தேவையான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்க வேண்டுமென்று கோரி, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ் ஜெய்சங்கர் அவர்களுக்கு இன்று (10-7-2023) கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 15 மீனவர்கள் IND-TN-10-MM-677 மற்றும் IND-TN-10-MM-913 பதிவு எண்கள் கொண்ட படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற நிலையில், 9-7-2023 அன்று இலங்கைக் கடற்படையினரால் அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களது மீன்பிடிப் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் அவர்கள், இச்சம்பவம் தமிழ்நாட்டிலுள்ள மீனவ சமூகத்தினரிடையே மன உளைச்சலையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளார் இந்திய-இலங்கைக் கடல் எல்லையை ஒட்டிய பகுதிகளில் மீன்பிடித் தொழிலை நம்பியே பல்லாயிரக்கணக்கான மீனவர்களின் வாழ்வாதாரம் அடங்கியுள்ளதை மத்திய வெளியுறவுத் துறை மந்திரி அவர்கள் நன்கு அறிவார் என்றும், தங்களது குடும்பத்தையும், சமூகத்தையும் பராமரிக்க மீனவர்கள் மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் அவர்கள், துரதிர்ஷ்டவசமாக, இலங்கைக் கடற்படையினரால் இதுபோன்று கைது செய்யப்படும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்ந்து வருவது மீனவர்களையும், அவர்களது குடும்பத்தினரையும் ஆழ்ந்த வேதனையிலும், நிச்சயமற்ற தன்மையிலும் ஆழ்த்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நமது மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும், பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து மீன்பிடிப் படகுகளைத் திரும்ப ஒப்படைக்கவும் மத்திய அரசு, இலங்கை அதிகாரிகளுடன் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்றும் தற்போது இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் சுமூகமான நட்புறவு பேணப்பட்டு வரும் நிலையில், தூதரக நடவடிக்கைகள் மூலமாகத்தான் மீனவர்களின் உரிமைகள் மற்றும் வாழ்வாதாரங்களைப் பாதுகாத்திடவும், சுமூகத் தீர்வினை எய்திடவும் இயலும் எனவும் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திலிருந்து சாதகமான பதிலை எதிர்பார்ப்பதாகவும் தனது கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *