திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்றம் சார்பில் டிசம்பர் மாத முதல் கூட்ட நிகழ்வில் என்ன பேசுவது எப்படி பேசுவது குறித்த சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி திருச்சி தமிழ்ச் சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. திருமதி கோவிந்தம்மாள் தமிழ் மன்ற தலைவர் தமிழ்ச்செம்மல் கோவிந்தசாமி ,விழா குழு தலைவர் வைகுண்ட மூர்த்தி உள்ளிட்டோர் தலைமை வகித்தனர்.
செயலர் ஜெயலட்சுமி துவக்க உரையாற்றினார். பொருளாளர் பாலமுருகன், துணைத்தலைவர்கள் அருணாச்சலம், மனநல மருத்துவர் லட்சுமி நந்தகுமார்,ஒருங்கிணைப்பாளர் லால்குடி முருகானந்தம், இணைச் செயலர் விஜயகுமார், மன்ற ஆலோசகர் முனைவர் அருணா தினகரன், கவிஞர் மாரிமுத்து, செயற்குழு உறுப்பினர்கள் குணசீலன், பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். என்ன பேசுவது எப்படி பேசுவது குறித்து ஊக்க பேச்சாளர் நாகப்பன் பேசுகையில்,நீங்கள் பேசும் சூழலுக்கேற்ப தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கவும்.
பேச்சுக்கலையின் கூறுகளைப் புரிந்து கொண்டு மொழி, ஒலி, சைகைகள், முகபாவனைகள் போன்ற அனைத்து கூறுகளையும் கவனமாகப் பயன்படுத்துங்கள்.அடிப்படைத் தகவல்களைத் தயாராக வைத்திருங்கள். நீங்கள் பேசப் போகும் விஷயத்தைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருங்கள்.நம்பிக்கையுடன் பேசுங்கள். நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதில் வலுவான நம்பிக்கை இருக்க வேண்டும்.
எப்படி பேசுவதெனில்,மெதுவாகவும் தெளிவாகவும் பேசுங்கள். அவசரமாகப் பேசாமல், வார்த்தைகளை உச்சரித்து, தெளிவாகப் பேசுவது முக்கியம்.
கேட்பவர்களைப் புரிந்து கொள்ளுங்கள். உங்கள் பேச்சைக் கேட்பவர்களின் எதிர்வினைகளைக் கவனியுங்கள்.
உடலசைவுகளைப் பயன்படுத்துங்கள். உங்கள் கைகளை, முகபாவனைகளை, சைகைகளைப் பயன்படுத்தி உங்கள் பேச்சிற்கு உயிர் கொடுங்கள்.
நம்பிக்கையுடன் இருங்கள். உங்களை நம்புவதும், நீங்கள் பேசும் விஷயங்களில் நம்பிக்கை கொள்வதும் உங்கள் பேச்சின் தரத்தை மேம்படுத்தும்.
சிறந்த உரையாடலை உருவாக்குங்கள். கேள்வி கேட்டல், பதிலளித்தல், கருத்துப் பரிமாற்றம் செய்தல் ஆகியவற்றைச் சரியான நேரத்தில் செய்ய வேண்டும் என்றார். முன்னதாக நடராஜன் வரவேற்க நிறைவாக மகாலட்சுமி நன்றி கூறினார்.