திருப்பரங்குன்றம் கைது சம்பவம்: திமுக அரசை கண்டித்து தாராபுரத்தில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில், திருப்பரங்குன்றத்தில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மற்றும் ஹெச். ராஜா திடீர் கைது செய்யப்பட்டதை கண்டித்து, பாஜகவினர் தாராபுரம் மதிய பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பாஜக கொடியுடன் திமுக அரசை கடும் கண்டனத்துக்கும், அறநிலைத்துறை அமைச்சர் சேகர் பாபுவின் நடவடிக்கைகளை எதிர்த்தும் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாஜக நகரத் தலைவர் ரங்கநாயகி தலைமை வகித்தார்.
பாஜக பொருளாளர் அழக அழகர்ராஜா, பொதுச் செயலாளர்கள் லோகேஷ் குமார் மற்றும் கார்த்திக், இளைஞரணி பொதுச் செயலாளர் செல்வபாண்டி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். 20-க்கும் மேற்பட்ட பாஜகவினர் இதில் கலந்துகொண்டனர்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபமேற்ற வேண்டும் என கோரிய பாஜக தலைவர்கள் மற்றும் இந்து அமைப்பினர்கள் கோயில் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டபோது, தீபமேற்ற அனுமதி வழங்க முடியாது என காவல்துறையினர் தெரிவித்தனர்.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்திற்குப் பின்னர், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்ற காரணத்தால் நயினார் நாகேந்திரன் மற்றும் ஹெச். ராஜா கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட தலைவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும், திமுக அரசு ஜனநாயக உரிமைகளை பறிக்கிறது எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்திற்காக தாராபுரம் காவல் ஆய்வாளர் விஜயசாரதி தலைமையில் பத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.