தாராபுரம் செய்தியாளர் பிரபு
செல்:9715328420
தாராபுரத்தில் அம்பேத்கர் சிலை அமைக்க கோரி நாயிடம் மனு – ஆதித்தமிழர் கழகத்தினர் நடவடிக்கை, போலீசாருடன் வாக்குவாதம்…
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சர்ச் சாலையில் உள்ள அண்ணா சிலை அருகே, புரட்சியாளர் சட்ட மேதை டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்களின் 69-ஆவது நினைவு நாளை முன்னிட்டு ஆதித்தமிழர் முன்னேற்றக் கழகத்தினர் சிறப்பு நிகழ்ச்சியை நடத்தினர். கிழக்கு மாவட்ட செயலாளர் காளிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
தாராபுரம் சட்டமன்ற தனித்தொகுதி உருவாக்கப்பட்டு 50 ஆண்டுகள் கடந்தும், அம்பேத்கர் சிலை அமைக்க தேவையான அரசு அனுமதி கிடைக்காத நிலை தொடர்கிறது. உள்ளூர் கோட்டாட்சியர் முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் வரை பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்புகள் பல முறை மனுக்கள் அளித்திருந்தும், அதிமுக ஆட்சியிலும், தற்போதைய திமுக ஆட்சியிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கழகத்தினர் குற்றம்சாட்டினர். முப்பது ஆண்டுகளாக மனு கொடுத்தும் அரசு எந்த பதிலும் தராததால், “யாரிடம் மனு கொடுப்பது?” என்பது கேள்வியாகவே உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
இந்த சூழலில், அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு, அரசு அதிகாரிகள் மீது கவனம் திருப்பும் நோக்கில், புரட்சியாளர் அம்பேத்கர் படத்தின் முன், பொம்மரேனி நாயிடம் மனு அளிக்கும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. “அதிகாரிகளிடம் தொடர்ந்து மனு கொடுத்தும் பயன் இல்லாததால், தமிழக அரசுக்கு மற்றும் அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில் இவ்வாறு மனு வழங்குகிறோம். எங்களுடைய கோரிக்கைகள் அரசின் கவனத்துக்கு செல்ல வேண்டும் என்பதே எங்கள் நோக்கம்,” என கழகத்தினர் தெரிவித்தனர்.
இதனைக் கண்டு வந்த தாராபுரம் போலீசார், “மனு அரசு அதிகாரியிடம் அல்லது உரிய நிர்வாகிக்கு கொடுக்கப்பட வேண்டுமே தவிர, நாயிடம் மனு கொடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாது” என எச்சரித்ததன் காரணமாக, போலீசாருக்கும் ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சமரசம் செய்ததின் மூலம் நிலைமை அமைதியானது.
அம்பேத்கர் சிலை அமைப்பு தொடர்பான கோரிக்கையை விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதித்தமிழர் முன்னேற்ற கழகத்தினர் வலியுறுத்தினர்.