கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ‘ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025’-ன் பிரம்மாண்ட இறுதி சுற்று துவங்கியது!

ஸ்மார்ட் இந்தியா ஹேக்கத்தான் 2025 (மென்பொருள் பதிப்பு) இறுதிப் போட்டி, கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் டிசம்பர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இதன் துவக்க விழா இன்று கல்லூரியில் நடைபெற்றது. மத்திய அரசால் இந்தப் பெருமைமிகு தேசிய அளவிலான நிகழ்ச்சியை நடத்தும் பொறுப்பு, 6வது முறையாக இக்கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வின் துவக்க விழாவிற்கு, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் திருமதி. எஸ். மலர்விழி அவர்கள், தலைமை தாங்கினார்.

இந்தியப் பம்ப் உற்பத்தியாளர் சங்கத்தின் (IPMA) தலைவரும், டெக்கான் இண்டஸ்ட்ரீஸின் நிர்வாக இயக்குநருமான திரு. கே.வி. கார்த்திக், இந்த நிகழ்வின் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர். கே. பொற்குமரன் அவர்கள் வரவேற்புரை வழங்கியபோது, இந்த இறுதிப் போட்டியில் இந்தியாவின் பல்வேறு கல்வி நிறுவனங்களில் இருந்து மொத்தம் 108 மாணவர்கள் அடங்கிய 20 குழுக்கள் பங்கேற்றுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் சவாலான 4 புதிர் அறிக்கைகளுக்கு தீர்வு காண உள்ளதாகவும் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினர் கே.வி. கார்த்திக் அவர்கள் பேசுகையில், ஜல் சக்தி அமைச்சகத்தின் இப்போடிக்கான புதிர் அறிக்கைகள், இந்தியாவின் நீர் பாதுகாப்புப் பணிக்கு மிகவும் அவசியமானவை என்றார்.

“இந்த ஹேக்கத்தானில் நீங்கள் அளிக்கும் தீர்வுகள், நமது வாழ்க்கை முறையை மேம்படுத்துவதுடன், மத்திய அரசின் ‘விக்சித் பாரத் 2047’ இலக்கை நோக்கிய முன்னேற்றத்திற்கும் வழி வகுக்கும்,” என்றும் அவர் கூறினார்.

“இந்த ஹேக்கத்தான் ஒரு போட்டி மட்டுமல்ல, இது ஒரு பொறுப்பு, நமது நாட்டின் மிகப்பெரும் வளர்ச்சி பாதைக்கு இது ஒரு கட்டுமானப் பணி போன்றது. ‘விக்சித் பாரத் 2047’ இலக்கில், ஒவ்வொரு வீட்டிற்கும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் 24 மணி நேரமும் கிடைக்க வேண்டும் என்று கனவு உள்ளது. இந்த இலக்கை அடைய, நவீன, உறுதியான மற்றும் நிலையான நீர் உள்கட்டமைப்பை நாம் வடிவமைத்து பயன்படுத்த வேண்டும். இது இங்குள்ள ஒவ்வொரு பொறியாளரின் பணியாகும்,” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், காணொளி மூலம் போட்டியாளர்களுடன் உரையாடினார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் திருமதி. எஸ். மலர்விழி அவர்கள், போட்டியாளர்களின் பணி நிலையங்களை நேரில் பார்வையிட்டு, இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றதற்காக வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இந்த துவக்க நிகழ்வில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் சி.இ.ஓ. முனைவர். கே. சுந்தரராமன்; ஏ.ஐ.சி.டி.ஈ – எம். ஐ.சி.யின் இயக்குநர் மற்றும் சி.வீ.ஓ திருமதி. கரிமா ரோஹேலா; ஏ.ஐ.சி.டி.ஈ – எம். ஐ.சி.யின், மூத்த கணக்கு அதிகாரி மற்றும் நோடல் சென்டர் தலைவர் யோகேஷ் வாத்வான்; மற்றும் ராண்ட்ஸ்டாட் என்டர்பிரைஸ், புனேவின் பொறியியல் துறை துணைத் தலைவர் திரு. பராக் குல்கர்னி; நடுவர்கள், வழிகாட்டிகள் மற்றும் தொழில்துறை வல்லுநர்கள் உட்படப் பல முக்கியப் பிரமுகர்கள் பங்கேற்றனர்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்லூரியின் துறைத் தலைவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, இந்த இறுதிப் போட்டியை வெற்றிகரமாக ஏற்பாடு செய்து, அனைத்துப் பங்கேற்பாளர்களுக்கும் ஒரு சிறப்பான மற்றும் மறக்க முடியாத அனுபவத்தை உறுதி செய்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *