பா.வடிவேல் அரியலூர் செய்தியாளர்

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை பேரூராட்சி மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் ரூ.20.56 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்திப் பணிகளை மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா தலைமையில், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் முன்னிலையில் நடைபெற்றது.

இதில் வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் தனிநபர் குடிநீர் தேவை நாள் ஒன்றுக்கு 70 லிட்டர் என்ற அடிப்படையில் பேரூராட்சியின் தினசரி குடிநீர் தேவை 0.671 MLD ஆகும். வரதராஜன்பேட்டை பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளிலும் 19 ஆழ்குழாய் கிணறு மூலம் 13 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு நாள் ஒன்றுக்கு 9.00 இலட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இதன்படி நாள் ஒன்றுக்கு நபர் ஒருவருக்கு 94 லிட்டர் என்ற அடிப்படையில் தினசரி 1 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வரதராஜன்பேட்டை பேரூராட்சியில் தற்போதைய மக்கள் தொகை உத்தேசமாக 9580 ஆகும். தற்போது 2023-2024 ஆம் ஆண்டு அம்ரூத் 2.0 திட்டத்தின்கீழ் ரூ.8.72 கோடி மதிப்பீட்டில் குடிநீர் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இதன் மூலம் ஆழ்குழாய் கிணறு 3 எண்ணிக்கையும், 0.90 இலட்சம் கொள்ளளவு கொண்ட சம்பு ஒரு எண்ணிக்கையும், 0.60 இலட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், பிரதானக்குழாய் 2.95 கி.மீ நீளமும், பகிர்மான குழாய் 27.47 கி.மீ நீளமும் அமைக்கப்பட உள்ளது. இதன் மூலம் தனி நபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு கூடுதலாக 10 லிட்டர் வழங்கப்படவுள்ளது.

இதேபோன்று உடையார்பாளையம் பேரூராட்சியில் தற்போதைய மக்கள் தொகை உத்தேசமாக 14299 ஆகும். அதன்படி 17 ஆழ்துளை கிணறுகள் மூலம் 6 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் குடிநீர் ஏற்றப்பட்டு 6.40 இலட்சம் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது.

இதன்படி தனிநபர் ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு 84 லிட்டர் என்ற அடிப்படையில தினசரி குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவருகிறது. தற்போது அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் உடையார்பாளையம் பேரூராட்சியில் ஆழ்துளை கிணறுடன் கூடிய மின்மோட்டார் 5 எண்ணிக்கையிலும், 1.50 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 1 எண்ணிக்கையும், 1 லட்சம் லிட்டர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி 1 எண்ணிக்கையும், 3.601 கி.மீ நீளத்திற்கு குடிநீர் பிரதான குழாயும், 38.631 கி.மீ நீளத்திற்கு குடிநீர் விநியோக குழாயும், 3180 வீட்டு குடிநீர் இணைப்புகளும் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ஒரு தனிநபருக்கு 96 லிட்டர் என்ற அளவில் குடிநீர் வழங்கப்படும்.

மேலும், வரதராஜன்பேட்டை மற்றும் உடையார்பாளையம் பேரூராட்சிகளில் அம்ரூத் 2.0 திட்டத்தின் கீழ் துவக்கி வைக்கப்பட்டுள்ள குடிநீர் அபிவிருத்திப் பணிகள் நிறைவடையும் பொழுது பேரூராட்சிகளின் அனைத்து வார்டுகளுக்கும் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்யும் வகையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளில் வருவாய் கோட்டாட்சியர் பரிமளம், வட்டாட்சியர்கள் இளவரசன் (ஆண்டிமடம்), கலீலூர்ரகுமான் (ஜெயங்கொண்டம்), பேரூராட்சி செயல் அலுவலர் கோமதி, வரதராஜன்பேட்டை பேரூராட்சி தலைவர் மார்கிரேட் அல்போன்ஸ், உடையார்பாளையம் பேரூராட்சித் தலைவர் மலர்விழி ரஞ்சித்குமார், அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *