ஜே சிவகுமார் திருவாரூர் மாவட்ட செய்தியாளர்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது

திருவாரூர் மாவட்டத்தில், நவம்பர்-2023 மாத இயல்பான மழையளவு 350.54 மி.மீ. ஆகும். நடப்பாண்டில் நவம்பர் மாதத்தில் 351.8 மி.மீ மழை பெறப்பட்டது. 29.11.2023 அன்று மேட்டூர் அணையின் நீர்மட்டம் 65.87 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 4026 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையிலிருந்து வினாடிக்கு 253. கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

2023-24-ஆம் ஆண்டில் குறுவை பருவத்தில் 36,914 ஹெக்டேரிலும், சம்பா மற்றும் தாளடி பருவத்தில் 1,53,808 ஹெக்டேரிலும், கோடை சாகுபடி 9,742 ஹெக்டேரிலும் ஆக மொத்தம் 2,00,464 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது, அதில் குறுவை பருவத்தில் 19,681 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 41,101 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 9,311 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 70,093 ஹெக்டேரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

சம்பா பருவத்தில் 35,740 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 30,079 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 9,582 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 75,401 ஹெக்டேரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தாளடி பருவத்தில் 12,395.7 ஹெக்டேரில் நேரடி நெல் விதைப்பு முறையிலும், 39,512.25 ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி முறையிலும், 17,617.1 ஹெக்டேரில் சாதாரண நெல் நடவு முறையிலும் ஆக மொத்தம் 69,525 ஹெக்டேரில் தாளடி சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

2023-2024ஆம் ஆண்டில் உளுந்து 36,700 ஹெக்டேரிலும், பச்சைப்பயறு 50,000 ஹெக்டேரிலும்; ஆக மொத்தம் 86,700 ஹெக்டேரில் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், காரீப் பருவத்தில் 762 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும், ராபி பருவத்தில் 301 ஹெக்டேரில் உளுந்து சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. 2023-2024ஆம் ஆண்டில் நிலக்கடலை 4,480 ஹெக்டேரிலும், எள் 2,530 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதில் 84 ஹெக்டேரில் நிலக்கடலை சாகுபடியும், 88 ஹெக்டேரில் எள் சாகுபடியும் செய்யப்பட்டுள்ளது. மேலும், 2023-2024ஆம் ஆண்டில் பருத்தி 14,000 ஹெக்டேரிலும், கரும்பு 120 ஹெக்டேரிலும் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதில், 85 ஹெக்டேரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் தற்போது நெல் நடவு முடிந்து பயிர் தூர்கட்டும் பருவத்தில் நெற்பயிர்கள் உள்ளன. ஆங்காங்கே இலை மடக்குப் புழு தாக்கங்கள் காணப்படுவதால் விவசாயிகள் உடனே இரசாயன மருந்துக்களை தெளித்து அவற்றை கட்டுப்படுத்த முனைகின்றனர். பொதுவாக பூச்சி தாக்கங்கள் நெற்பயிரில் அனைத்து பருவத்திலும் தாக்கி சேதாரத்தை விளைவிக்கக் கூடியது. அதை தடுப்பதற்கு உண்டான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடித்தலே பூச்சி தாக்கத்தில் இருந்து பயிரை பாதுகாக்கலாம். தற்போதைய தூர்கட்டும் பருவத்தில் அதிக அளவிலான. இரசாயன உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக தழைச்சத்து உரங்களை ஒரே நேரத்தில் இடுவதை விட இரண்டாக பிரித்து ஒரு வார இடைவெளியில் இடலாம்.

இதனால் பூச்சி மற்றும் நோய்களின் பெருக்கத்தை தடுக்கலாம் மேலும் நெல் வயலில் ஆங்காங்கே பறவைகள் உட்காருவதற்கு ஏதுவாக தென்னை மட்டையின் அடிப்பகுதியை வெட்டி மூன்றடி உயரத்திற்கு தயார் செய்து ஊன்றிவிட்டால் பகல் மற்றும் இரவு நேரப் பறவைகள் நெற்பயிரைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் புழுக்களைப் பிடித்து உண்டுவிடும். இலை மடக்குப் புழு தாக்கங்கள் ஏற்படுவதற்கான அறிகுறியாக. இலைகள் நீளவாக்கில் மடிக்கப்பட்டு உட்புறத்தில் உள்ள புழுவானது இலையின் பச்சையத்தை சுரண்டி உண்கின்றன.

இதன் தாய்அந்துப் பூச்சிகளின் நடமாட்டத்தை விளக்குப் பொறிகள் ஏக்கருக்கு ஒன்று என்ற அளவில் வைத்து கண்காணிக்கலாம். தாய்அந்துப் பூச்சிகளின்
நடமாட்டம் அதிகமாகும் போது ஏக்கருக்கு ஐந்து என்ற அளவில் விளக்குப் பொறிகள் வைத்து அவற்றை கவர்ந்தழிக்கலாம். முன்னெச்சரிக்கையாக முட்டை ஒட்டுண்ணி அட்டைகளைப் பயன்படுத்தலாம் மேலும் வேப்பங்கொட்டைச் சாறு 5 சதவிகிதம் அல்லது வேப்பெண்ணை 3 சதவிகிதம் என்ற அளவில் தெளிக்கலாம். தற்போது நிலவும் பருவநிலையால் பூச்சித்தாக்கம் சேதார நிலையை விட அதிகமாகும் போது மட்டும் பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தலாம் எக்டருக்கு அசார்டிராக்டின் 0.03 சதவிதம் 1000 மி.லி அல்லது கார்டாப்ஹைட்ரோகுளோரைட் 50 சதவிதம் 1000 கிராம் அல்லது புளுபென்டிமைட் 20 சதவிதம் 125-250 கிராம் என்ற அளவில் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை தெளித்து கட்டுப்படுத்தலாம் என மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ அவர்கள் இது குறித்து விவசாயிகள் விழிப்புடன் செயல்பட்டு பூச்சித்தாக்கத்தில் இருந்து பயிரை பாதுகாத்து அதிக மகசூல் ஈட்டுமாறு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ கேட்டுக்கொண்டுள்ளார்

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் வருவாய் கோட்டாட்சியர்கள் சங்கீதா (திருவாரூர்) செல்வி.கீர்த்தனா மணி (மன்னார்குடி) வேளாண்மைதுறை இணை இயக்குநர் .ஏழுமலை, வேளாண்மை துணை இயக்குநர் (மாநில திட்டம்) லெட்சுமிகாந்தன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) விஜயலெட்சுமி கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் கா.சித்ரா தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் ராஜராஜன் உள்ளிட்ட அரசு உயர்அலுவலர்கள் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *