தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு- ஆராய்ச்சி மைய கட்டிட பணிகளை தொடங்கி வேண்டும் என முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தமிழக கால்நடை மற்றும் மீன் வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-

தென்காசி சட்டமன்ற தொகுதி, பாவூர்சத்திரத்தில் தமிழ்நாடு கால்நடைத்துறை சார்பில் நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடம் கட்டுவதற்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அரசாணை வெளியிடப்பட்டு ரூ.72.55 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு ஜுன் மாதம் அடிக்கல்நாட்டி தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிலையில் தென்காசி-திருநெல்வேலி நான்கு வழிச்சாலை நடைபெற்ற நிலையில், பாவூர்சத்திரம் பிரதான சாலையில் வேன்கள் நிறுத்தும் இடத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கியதால், அங்கு நிறுத்தப்பட்டிருந்த வேன்கள் அனைத்தும், மேற்படி கட்டிடப்பணி நடைபெறும் இடத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. இதனால் கட்டிட பணிகள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது சாலைப்பணிகள் நிறைவு பெற்ற நிலையில், அந்த பகுதியில் வேன்கள் நிறுத்துவதற்கு போதுமான இடவசதிகள் உருவாகிவிட்டது. எனவே பாவூர்சத்திரத்தில் அடிக்கல் நாட்டப்பட்ட இடத்தில் உருவாக இருந்த நாட்டின நாய்கள் இன பாதுகாப்பு மற்றும் ஆராய்ச்சி மைய கட்டிடப்பணியினை விரைவாக தொடங்கிட நடவடிக்கை எடுக்கும் படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கட்டிடப்பணியை தொடங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். அப்போது தலைமை பொதுக்குழு உறுப்பினர் சீவநல்லூர் கோ.சாமித்துரை உடனிருந்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *