பா.வடிவேல் – அரியலூர் செய்தியாளர்
அரியலூர் மாவட்டம், அரியலூர் வட்டம், கீழப்பழுவூரில் செயல்பட்டு வரும் செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம், தனது சமூக மற்றும் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் கீழ், கிழக்கு மற்றும் மேற்கு சீனிவாசபுரம் கிராம மக்களின் நீண்டநாள் குடிநீர் தேவையை நிறைவேற்றும் வகையில் முக்கியமான திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அதன் ஒரு பகுதியாக, கிராம பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று, தலா ரூபாய் இரண்டு லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட இரண்டு குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டன. இந்நிலையங்களை செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் ஆலைத் தலைவர் ஆர்.பி. முத்தையா அவர்கள் திறந்து வைத்தார்.
இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூலம், கிழக்கு மற்றும் மேற்கு சீனிவாசபுரம் கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பாதுகாப்பான, சுத்தமான குடிநீரை எளிதில் பெறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கோடைகாலங்களில் ஏற்படும் குடிநீர் தட்டுப்பாடு மற்றும் நீர்த் தரம் குறித்த சிக்கல்களுக்கு இது நிரந்தர தீர்வாக அமையும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.
திறப்பு விழாவில் அரசு துறை அலுவலர்கள், செட்டிநாடு சிமெண்ட் நிறுவனத்தின் ஆலை அதிகாரிகள், கிராமத்தின் முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு, இத்திட்டத்தை செயல்படுத்திய நிறுவனத்திற்கு நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
சமூக நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் கிராம வளர்ச்சியை முன்னிறுத்தி செட்டிநாடு சிமெண்ட் நிறுவனம் தொடர்ந்து பல்வேறு மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இக்குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்கள், கிராம மக்களின் வாழ்வாதாரத் தரத்தை உயர்த்தும் வகையில் முக்கிய பங்காற்றும் என அனைவரும் நம்பிக்கை தெரிவித்தனர்.